5. வள்ளல்கள்
மூவேந்தர் ஆட்சி புரிந்த தமிழகத்தில், அம்மூவேந்தர்களே அல்லாமல், அவர்களுக்கு அடங்கியும், அடங்காதும் அரசாண்டிருந்தார்களும் பலர் இருந்தனர்.
எட்டுத் தொகை, பத்துப்பாட்டு போலும், இலக்கியங்களும், தொல்காப்பியம் போலும் இலக்கணமும் இருக்கின்றன என்றால். அன்று அவற்றை ஆக்கி அளித்த புலவர் பெருமக்களை, அவர்கள் தம் பசி அறியாவாறு பொன்னும் பொருளும் அளித்துக் காத்த வள்ளல்களே காரணம். சங்ககால வள்ளல்களாக , அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய் அண்டிரன், வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, கண்டீரக்கோப் பெருநற்கிள்ளி, பறம்பிற் கோமான் பாரி, வையாவிக் கோப்பெரும் பேகன் என எழுவரைக் கூறுகின்றன.1 என்றாலும், அவர்களுக்குப் பிறகு அவர்களே போலும் வள்ளல்களாக வாழ்ந்தனர் என, ஓய்மானாட்டு நல்லியக் கோடனைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் 2 குமணனைப் புலவர் பெருஞ்சித்திரனாரும் 3 கூறியிருப்பதால் அவ்விருவரையும் சேர்த்து வள்ளல்கள் ஒன்பதின்மராவர்.
1. அஞ்சி
இவனைப் பாடிய புலவர்கள், அரிசில் கிழார்,4 ஒளவையார்,5 தாயங்கண்ணனார்,6 பரணர்,7 பெருஞ்சித்திரனார்;8 ஆக, ஐவர் ஆயினும், அவனைப் பெருமளவில் பாடியவர் ஒளவையார் ஆவர்.