பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட சிறுநாட்டை ஆண்ட மலையமான் வழிவந்தவன்54 முள்ளுர் மலையினைக் கொண்ட அந்நாடு பகைவராலும் அழிவுறாது; கடல் கோள்களாலும் அழிவுறாது;55 அம்மலையமான்கள் சிலகாலம், சோழர்க்கும், பிறிதொருகாலம் சேரர்க்கும் படைத்துணை அளித்து வந்தனர்56; தமிழகத்தைத் தனதாக்கிக் கொள்ள வந்த ஆரியப் படையை வென்று துரத்தியவர் அம்மலையமான்கள்.57

அம்மலைய மன்னர்களில் சிறந்தவன், காரி. அவன் தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சிபால் தோல்வி கண்டான். தலைநகரும் பேரழிவுக்கு உள்ளாயிற்று58 அதியன்பால் தோல்வி கண்ட காரி, அவனை அழித்தற்கு ஏற்ற வழிமுறைகளை எண்ணியிருந்தான். அப்போது, சேர நாட்டு அரியணையில் இருந்த பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூரான் பால் பகை கொண்டுள்ளான் என்பது அறிந்து, அவன் துணை நாடினான். அவனோ, நான் உனக்குத் துணை புரிய வேண்டின், நீ என் பகைவனாகிய கொல்லிமலை ஓரியைக் கொன்று வரவேண்டும் என்றான். உடனே, காரி கொல்லி சென்று ஓரியைக் கொன்றான்59 அதனால் மகிழ்ந்த பெருஞ்சேரல், அதியமானின் தகடூர் மேல் படையெடுத்துச் சென்று, அதியமானைக் கொன்று காரியின் மனம் மகிழச் செய்தான். சேரனுக்குத் துணை போகிறான் காரி என்பதால், மலையமான் மக்களை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கைப்பற்றிக் கொண்டு போய் யானையின் காற்கீழ் இட்டுக்கொல்லத் துணிந்தான். அது அறிந்த