17
இந்நிலையில், நாட்டு நிகழ்ச்சி அறியாத புலவர் பெருந்தலைச் சாத்தனார், குமணன்பால் பரிசில் பெற விரும்பினார். குமணன், தம்பிக்குத் தலைமறைவாகி விட்டானே அல்லது, அவன் மறைந்து வாழுமிடம் புலவர்கள் அறிந்த இடம்; அதனால் குமணன் பால் சென்று, கொடை வேண்டிப் பாடினார்.117 ஆனால், குமணன் பால் கொடுப்பதற்கு ஏதும் இல்லை. ஆயினும் கொடுப்பதைக் கைவிட்டான் அல்லன். தம்பி, தன் தலைக்கு விலைவைத்துப் பறை அறைந்திருப்பதை அவன் அறிவான். அதனால், தன் போர்வாளைப் புலவர் கைக் கொடுத்துப் "புலவீர்! இவ்வாள் கொண்டு என் தலையைக் கொய்து சென்று, என் தம்பி கைக்கொடும்; அவன் கோடிப் பொன் தருவன்" என வேண்டி வாளைத் தந்தான்.
வாள் பெற்ற புலவர், தன் வறுமை வாட வேண்டும் என்று எண்ணும் வன்கணாளர் அல்லர்; வள்ளல்கள் வாழ வேண்டும் என்ற வளமார் உள்ளம் படைத்தவர்; அதனால், வாள் கைக் கொண்ட புலவர் விரைந்தார் இளங்குமணன் பால், காட்டில் நடந்ததைக் கூறினார்118. முடிவு தெரிந்திலது எனினும், புலவர் செயல் அறிந்து தன் அண்ணன் பெருமை உணர்ந்து, அண்ணனைக் கொன்று அரசாள விரும்பிய தன் கொடுஞ்செயலை அறவே கைவிட்டிருப்பன் என்றே கொள்ளுதல் வேண்டும்.
இவ்வொரு செயல், தலை கொடுத்தாயினும், புலவர்களை வறுமையில் நீக்கி வாழ வைக்க விரும்பும் வள்ளல்கள் பெருமையும்; தமக்குப் பரிசிற் பொருள்கள் தான் குறிக்கோள் என் எண்ணாது, பரிசில் இல்லையாயினும், வள்ளல்களை வாழ வைப்பதுதான் என உலகிற்குக் காட்டும் புலவர்கள் பெருமையும், காட்டி விட்டது.
3