பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. சேரர்.

சேர, சோழ, பாண்டியர் மூவரும் ஒருதாய் வயிற்றில் பிறந்தோரே எனவும், அவர்கள் தென்னாட்டில், நாகரீக வளர்ச்சிக்குத் தோன்றுமிடமாகிய தாமிரவருணி யாற்றங்கரையில், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்து வந்தனர் எனவும், பின்னர் யாது காரணத்தாலோ, தம்முள் பிரிந்தனர் எனவும், அவருள் பாண்டியர் அங்கேயே நிலைத்து விட்டனராக, ஏனை இருவரும் முறையே மேற்கிலும், வடக்கிலும் சென்று, தங்கள் தங்கள் பெயர்களால் தனியரசுகள் அமைத்துக் கொண்டனர் எனவும் பழைய வரலாறுகள் கூறுகின்றன.

மூவேந்தர்நாடுகள் மூன்றும், சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, என வழங்கப் பெறுதலோடு, அவை முறையே “குடபுலம்”, “குணபுலம்”, “தென்புலம்” என அவை அமைந்துள்ள திசையானும் அழைக்கப் பெறும். இது, அந்நாடுகாவல் கொண்டாரை, முறையே, “குடபுலம் காவலர் பெருமான்”, “குணபுலம் காவலர் பெருமான்”, “தென்புலம் காவலர் பெருமான்” எனப் பெயரிட்டுச் சிறுபாணாற்றுப்படை அழைப்பதால் புலனாகும்.

செந்தமிழ் மொழி வழங்கும் நாடுகளாகப் பண்டு விளங்கிய பன்னிரண்டு நாடுகளுள், குட்டம், குடம், கற்கா, பூழி, மலாடு என்ற ஐஞ்சிறு நாடுகளையும் உள்ளடக்கிய நிலமே, குடபுலம் என்ற பெயரில் வழங்-