8
கிய சேரநாடாகும். சேலம், கோவை மாவட்டங்களைக் கொண்ட கொங்குநாடும், அச்சேர நாட்டின் உள் நாடுகளுள் ஒன்று. அயிரை, கொல்லி, பாயல், நன்றா, நேரி முதலாம் மலைகள் சேரநாட்டிற்குச் சிறப்பளித்து நிற்கும் மலைகளாம். அந்நாட்டின் வளம்பெருக ஓடும் ஆறுகள், ஆன்பொருநை, காஞ்சியாறு, குடவனாறு, காரியாறு, பேரியாறு முதலாயின. கன்னிக்காவிரியின் தோற்றமும், இளமையும் ஈண்டே. பொன்கொழிக்கும் புறநாட்டு வாணிப நிலையங்களாகவும், வளங் கொழிக்கும் உள்நாட்டு ஊர்களாகவும், அரசியல் தலைமை நிலையங்களாகவும் சிறப்பளிக்கும் சேர நாட்டுச் செல்வப் பேரூர்கள், கருவூர், தொண்டி, நறவு, மாந்தை, மரந்தை, வஞ்சி முதலாயினவாம். சேரநாடு பல்வேறு வளங்களையும் ஒருங்கு கொண்ட நாடே ஆயினும், அவ்வளங்களுள் குறிப்பிடத்தக்க பெருவளம், “வேழம் முதலாம் மலைபடுபொருள்களே.” “வேழம் உடைத்து மலைநாடு” எனக்கூறுவதும் அறிக. வேழங்கள் நிறைந்து விளங்கும் காடொன்று அதன்பால் உண்டு. அது வேழக்காடு, அல்லது உம்பற்காடு என அழைக்கப் பெறும்.
செந்தமிழ்வேந்தர் மூவருள், சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. சேரர், சோழர், பாண்டியர் என அவர்கள், வழக்கிற்கண், முதற்கண் வைத்து வழங்கப்பெறுதலேபோல், “போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெரும் தானையர்”2 என, அவர்கள் மாலை, முதற்கண் வைத்து செய்யுட்கண் வழங்கப்பெறுதல் அறிக. சேரவேந்தர், ஆதன், இரும்பொறை, கடுங்கோ, வேட்டுவன், குடவர், கோதை, சேரர், சேரலர் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுவர்.