பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


22. ஆரியப்பொருநன்

வடநாட்டிலிருந்து வந்த மற்போர் வீரன். சேரர் படைத் தலைவன் கணையன் பொறுப்பில் வாழ்ந்தவன். கட்டி என்பானின் பொறுப்பில் வாழ்ந்திருந்த பாணன் என்ற மற்றொரு வடநாட்டு மற்போர் வீரன், ஆரியப் பொருநனோடு மற்போர் செய்ய முன் வந்தான். மற்போரில் ஆரியப் பொருநன் தோள் இரண்டும் முறிந்து தோற்றான். உயிர் இழந்தான். கணையன், நாணித் தலை குனிந்தான்.48

23. ஆரிய அரசன் பிரகத்தன்

தமிழ் நாட்டிற்கு அண்மையில் வாழ்ந்திருந்த ஆரிய அரசன். அவனுக்குத் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையிலும் தமிழ் மக்களின் பண்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மையிலும், புலவர் கபிலர், குறிஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடி அவனை நெறிப்படுத்தினார். கபிலர் பாடல் கேட்டு பிரகத்தன் தமிழ் அறிவு பெற்றான்.

24. இயக்கன்

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் துணைவன். அடங்கா சினம் கொண்டவன், ஆதலால் 'வெஞ்சின வியக்கன்' எனப் பெயர் பெற்றவன்.49

25. இருங்கோ வேண்மான்

வேளிர் குலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு, தலையாலங்கானம் என்ற இடத்தில் போரிட்ட எழுவரில் ஒருவன் போரில் தோற்று அழிந்தவன்.50