பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141எவ்வியின் நண்பன் அன்னி. திதியன் என்ற தலைவனோடு பகை கொண்ட அன்னி, திதியனின் காவல் மரமாம் புன்னையை அழிக்க விரும்பினான். திதியனின் ஆற்றலை அறிந்திருந்த எவ்வி, தன் நண்பன் அன்னிக்கு அறிவுரை கூறித் தடுத்தான். எவ்வியின் அறிவுரையைப் புறக்கணித்த அன்னி திதியனோடு போரிட்டு அழிந்தான்.68

பாண்டியப் பேரரசனான, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், எவ்வியின் மிழலையைக் கைப்பற்றத் துணிந்து படையெடுத்தான். எவ்வி போரில் உயிரிழந்தான். மிழலை பாண்டியனால் கைப் பற்றப்பட்டது.69

தம்மைப் புரந்த பெருவள்ளல் இறந்தானாகவே, தம் பாடல் தொழில் இனிப் பயனுறாது, தம் கை யாழால் இனிப் பயனில்லை, என்பதை உணர்ந்த பாணர், தம் யாழை ஒடித்துப் போட்டுப் புலம்பினர்.70

‘போரில் விழுப்புண் பெற்று எவ்வி வீழ்ந்தான்’ என்ற செய்தியைக் கேட்ட புலவர் வெள்ளெருக்கிலையார், அதை நம்பமறுத்தார். அச்செய்தி பொய்யாக வேண்டும் என விழைந்தது அவர் உள்ளம்71 களம் சென்ற அவர், ஆங்கே, எவ்வி உயிர் நீத்த இடத்தே, அவன் மனைவி பிண்டம் வைத்துப் படைத்து வழிபடுவதைக் கண்டு, கண்ணீர் விட்டு வருந்தினார். பாடிய புலவர்கள், மாங்குடி கிழார், வெள்ளெருக்கிலையார் குடவாயிற் கீரத்தனார்.72