பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சேர நாடாண்ட சேரவேந்தர், இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்; மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர். இவர்களுள் முன்னவர், வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர், தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர்.


உதியன் சேரலாதன்

சங்ககாலச் சேர வேந்தர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர வேந்தன், உதியன் சேரலாதன். இவன், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன்; உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுவன். வெளியன் வேண்மான் எனும் வேளிர்குலத் தலைவன் மகள் நல்லினி, இவன் மனைவி. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் இவன் மக்கள்.

உதியன் சேரலாதன், ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு, ஒன்று தன் நாட்டு எல்லையை விரிவாக்கியது. இரண்டாவது பெருஞ் சோறு அளித்தது.

உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேரரசன். கிழக்கு மேற்கு ஆகிய பெரும்கடல்களை எல்லையாகக் கொண்ட நாடுமுழுவதும் உதியன் அரசே நடைபெற்றது என்பதை அறிவிக்க வந்த புலவர், முரஞ்சியூர் முடிநாகராயர்: “அரசே! கீழ்க்கடலும் நினதே; மேலைக் கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன்