152
தலையாலங்கானத்தே எதிர்த்துப் போரிட்டு அழிந்த எழுவருள் திதியன் என்பானும் ஒருவன் என்று நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.116
அழுந்தைத் திதியனையும், பொதியில் திதியனையும் பரணர் பாடியுள்ளதால்.அது ஒரே திதியனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அன்னியோடு போரிட்ட திதியனையும், தலையாலங்கானத்துப்பட்ட திதியனையும் பற்றி நக்கீரர் பாடியுள்ளவையால், அவ்விரு திதியர்களும் வேறு வேறானவரல்லர், ஒருவனே எனவும் கொள்ளலாம்.
திதியன் எனும் பெயருடையார், இருவரோ, மூவரோ அல்லர்; அப்பெயருடையான் ஒருவனே; அவனைப் பாடிய புலவர்கள் அனைவரும், அவன் செயல் அனைத்தையும் எடுத்துக் கூறாது, அவற்றுள் தாம் தாம் விரும்பும் சிலவற்றை மட்டுமே எடுத்துக் கூறிப் பாராட்டியுள்ளனர்.
ஆகவே, அன்னியோடு போரிட்டோனும், அன்னி மிஞிலியின் துயர் களைந்தோனும், பாண்டியனைப் பகைத்தோனும், வேளிரோடு வாட்போர் புரிந்தோனும் அழுந்தைக் குரியோனும், பொதியில் வாழ்ந்தோனும் ஒருவனே எனக் கொள்க.
இதைக் குறித்து விரிவாக, தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட "சங்க கால அரசர் வரிசை—5, அகுதை முதலிய 44பேர்கள்" என்ற நூலில் 'திதியன்' என்ற தலைப்பின் கீழ் விரிவாக விளக்கியுள்ளேன், ஆண்டு கண்டு கொள்க. 117