உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


கடலிலேயே, அவன் மறைவதும் உன் கடலிலேயே" எனக் கூறி உள்ளார்.3

உதியன் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியைப் பாாரட்டிய புலவர்கள், முரஞ்சியூர் முடிநாகராயரும், இளங்கோவடிகளும், மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் ஆவர். இவருள் முன்னையர் இருவரும், உதியன் சேரலாதன் பாண்டவர் ஐவரும், கெளரவர் நூற்றுவரும் மேற்கொண்ட பாரதப் போரில், அப்போர் முடியுங்காறும் இரு திறப்படையினர்க்கும் சோறளித்துப் புரந்தான் எனக் கூறுகின்றனர்,4 பின்னவர் இருவரில் மாமூலனார், இறந்து துறக்கும் புக்க பெரும் புகழ் நிறைந்த தம் முன்னோரை வழிபடல் கருதிய உதியஞ் சேரலாதன், ஆண்டுதோறும் அவர் நினைவாகப் பெருஞ்சோறு படைத்தான் என்றும்,5 கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், கொடுத்தல் தன் பிறவிக் கடன் என்ற நல் உள்ளம் உடைமையால், உதியன் சேரலாதன், பல்லாண்குன்று என்ற மலையிடத்துக் குழுமூரில், அட்டிற்சாலை அமைத்து வருவார்க்கெல்லாம் உணவு படைத்தான் என்றும் கூறியுள்ளனர்.

சோறளித்த சேரலாதன் செயலை ஏற்றுக் கொள்வாரும், மறுப்பாருமாக இரு திறப்படுவர் ஆராய்ச்சியாளர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தையாகிய உதியஞ்சேரலாதன் கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவனாதல் வேண்டும். அவன், பாரதப்போர் வீரர்களுக்குச் சோறு அளித்தான் எனல் பொருந்தாது. ஆகவே, பெருஞ்சோறு அளித்த உதியன் செயல், பாரதக் காலத்தே வாழ்ந்து, அப்பாரத வீரர்க்குச் சோறளித்துப் புரந்த அவன் முன்னோன் செயலை, அவனுக்கு ஏற்றிக் கூறியதாதல் வேண்டும்