உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

என்று கருதுவர் சிலர். பாரத நிகழ்ச்சியை நாடகமாக்கி, ஆண்டு தோறும் நடித்துக் கொண்டாடுவதும், அவ்விழாவின் இறுதி நாளன்று, விழாக்காண வருவார்க்குச் சோறளித்துப் பேணுவதும் இந்நாட்டு வழக்கமாம். உதியன் செயலும் அதையே குறிப்பதாம் என்பர் மற்றும் சிலர். உதியன் சேரலாதனுக்கும், பாரதப் போருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உதியன் சோறளித்தல் இறந்த தன் முன்னோரைக் குறித்து ஆண்டுதோறும், நிகழ்த்தும் நினைவு விழாவின்போது சோறளித்ததையே குறிக்கும் என்பர் வேறு சிலர். “பாண்டியரில்6 பஞ்சவர், கெளரியர் என்போர் கிளைக்குடியினர். இந்தக் கிளைக்குடியினர்க்கிடையே போர் நடந்தபோது இவன் இருபடைக்கும் உணவு வழங்கியிருக்கலாம்” என்பர் மற்றும் சிலர். உதியன் சேரலாதன் வேறு. பெருச்சோற்று உதியலான் வேறு என்பர் சிலர்.

இனி, சோழன் கரிகால் பெருவளத்தானுடன் போரிட்டுப் பெற்ற புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் விட்ட, சேரமான் பெருஞ்சேரலாதன் என்பானைப் பாராட்டி கழாத்தலையாரும்,7 வெண்ணிக்குயத்தியாரும்8 பாடியுள்ளனர். இதே நிகழ்ச்சியை மாமூலனாரும்9குறிப்பிட்டுள்ளார். உதியஞ்சேரல், தன் நாட்டை விரிவு படுத்தியதையும் அவன் பரிசில்தரும் பெருமையினையும்,10 அவன் அளிக்கும் பெருஞ் சோற்று விழாவினையும்11 எடுத்துக் கூறிப்பாராட்டிய மாமூலனாரே வெண்ணியில் தோற்ற சேரலாதனையும் குறிப்பிட்டுள்ளார்.12 ஆகவே, கரிகாலனோடு போரிட்டுத் தோற்று வடக்கிருந்து உயிர் விட்ட சேரவேந்தன், உதியஞ்சேரலாதனே எனக் கொள்ளுதல் பொருந்துமா என்பதை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து துணிவார்களாக.