பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

தலைவனான அகுதை என்பான் அவர் துயர்களைய முன்வந்தான். அதனால் நன்னன் பகையினை ஏற்க வேண்டியவனாயினான். அகுதைக்குத் துணையாக நின்ற கோசர், அவனை, நன்னன் நெருங்காதவாறு காவல் செறிந்த இடத்தே வைத்துக் காத்தனர்.16

போர்த் திறன் கொண்ட கோசர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் படை வீரர்களாகப் பணி ஏற்றனர். அப்படைக்குத் தலைவனாய் விளங்கியவன் பழையன்மாறன் என்பான். பாண்டியர் தலை நகரான கூடல் மாநகரைக் கைப்பற்றச் சோழன் கிள்ளி வளவன் படையெடுத்த காலை, கோசர் பெரும்படையோடு பழையன் மாறன், கிள்ளி வளவனைப் புறங்கண்டான்.17

வடபுலத்துப் பேரரசான மௌரியப் பேரரசின் படையொன்று, தமிழகத்தைத் தன்னடிப்படுத்தும் நோக்குடன் தென்னாடு நோக்கி வந்தது. தமிழகத்தின் வடவெல்லையை அடுத்து வாழ்ந்த வடுகர் அம்மோரியர் தேர்ப்படைக்குத் துணையாக நின்றனர். வந்த பெரும் படை பழையனுக்குரிய மோகூரை வளைத்துப் போரிட்டது. பாண்டியனின் கோசர் பெரும் படை மோகூர் பழையனுக்குத் துணையாகப் போரிட்டது. மோரியர் தம் பெரும் படையை வென்று துரத்தித் தமிழகத்தைக் காத்தது.18

இவ்வாறு பெரு வீரர்களாய் வாழ்ந்த கோசர், இடைவிடாப் போர்ப் பயிற்சி மேற்கொண்டு தம் திறனை வளர்த்தனர். படைக்கலம் பயிலும் இளங்கோசர் முருக்க மரத்தான் இயன்ற இலக்கு அமைத்து, குறி தப்பாது படைக்கலங்களை எறிந்து பயிற்சி பெற்றனர்.19