பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

கண்ணகிக்குக் கோயில் கட்டிய செங்குட்டுவன் சிவபெருமான் திருவடிகளைத் தன் தலைமேலும், திருமால் பிரசாதத்தைத் தோளிலும் தாங்கும் சமரச சமய நெறி கண்டவனாவன்.40

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு, அவன் இளைய மனைவி, வேளாவிக் கோமான் பதுமன் மகள் வயிற்றில் பிறந்தவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் இவன் தம்பி. இவன் முடிசூடுகின்ற காலத்து, முடியும், கண்ணியும் காணாமல் போகவே, களங்காய்களால் ஆன கண்ணியும்; நாரால் பின்னப்பட்ட முடியும், அணிந்து கொண்டான். ஆகவே அப்பெயர் பெற்றான்.

கடம்பின் பெருவாயில் வாகைப்பெருந்துறை ஆகிய இரு இடங்களில், நன்னனை வென்று, இழந்த பூழி நாட்டை மீட்டதும்,41 அதியமான் நெடுமான் அஞ்சி வழி வந்த நெடுமிடல் என்பான் செருக்கை அடக்கியதும் இவன் வெற்றிகளாம்.42

சிறந்த கொடையாளி, இருபத்தைந்து ஆண்டுகள், அரசாண்டவன். பாடியபுலவர், காப்பியாற்றுக் காப்பியனார்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் தம்பி இவன். நறவு எனும் கடற்கரை நகரைத் தலைநகராக் கொண்டு, சேரநாட்டின் வடமேற்குப்பகுதியை ஆண்டவன். தமிழ-