பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அரண்மனைக்குச் சென்ற போது இவன் இல்லாது போகவே, வழிநடை வருத்தமிகுதியால், முரசு கட்டில் மீது கிடந்து உறங்கிவிட்டார். முரசுகட்டில், அரசு கட்டில் போலும் சிறப்புடையது. ஆகவே, அதில் படுத்துறங்குவது பெருங்குற்றம். ஆயினும், அங்கு வந்து புலவர் படுத்துறங்குவது கண்ட தகடூர் எறிந்தான், உறங்குபவர் புலவர் என்பதால், அவரை எழுப்பித் தண்டனை அளிப்பது கைவிட்டு, அவர் உறக்கம் கலையாது மேலும் உறங்கும் வரை மயில் இறகுகளால் ஆன விசிறி கொண்டு விசிறி நின்றான்.47 அவனுக்குப் பெருமை சேர்த்த செயல்களில் தலையாயது இது.

இளஞ்சேரல் இரும்பொறை

இவன் தந்தை குட்டுவன் இரும்பொறை. தாய், வேண்மாள் அந்துவம் செள்ளை,48 இவனைப் பாடிய புலவர், பெருங்குன்றுார்க்கிழார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, களங்காய்க் கண்ணியான், செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆகியோர்க்குக் காலத்தால் பிற்பட்டவன். குடக்கோச் சேரல் என்றும் அழைக்கப் பெற்றவன். பதிற்றுப் பத்து, ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். பகைவர்கள் செயலற்றுப் போக, போர் முரசுகள் இடியென முழங்கப் படை எடுத்துச் சென்று பகைவரை அழிப்பவன் எனப் புகழப் பெற்றவன் (புறம் 210, 211). பெருங்குன்றுர்க் கிழாரின் பாநலம் கேட்கும் ஆர்வம் மிகுதியால், நாள்தோறும், பரிசில் தருவது போல் காட்டித் தாராமலே நெடிது நாள், தன் அவையகத்திலேயே வைத்திருந்து போற்றினான்.