27
நம்பி குட்டுவனார்
சேர நாட்டிற்குரிய குட்ட நாட்டில் பிறந்து அக்கால ஆடவரிற் சிறந்து விளங்கினமையால் "நம்பி குட்டுவனார்" என அழைக்கப் பெற்றுள்ளார். நற்றிணையில் மூன்று பாடல்களும்,69 குறுந்தொகையில் இரண்டு பாடல்களும்70 பாடியுள்ளார். தலைவன் பிரிவால் தலைவியின் மேனியில் படர்ந்துவிட்ட பசலைநோய், அவன் நாட்டு மலைக்காற்று வீசிய அளவிலேயே இல்லாகி விடும்71 என்பனபோலும் நயம்செறிந்த பாடல்கள் அவை.
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
பேரரசர்கள், இறுதியில் உயிர்விட்ட இடங்களை அவர்கள் பெயர்களோடு இணைத்து, “இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்” முதல், “யானைமேல் துஞ்சிய இராச கேசரி இராசாதி இராசன்” வரை வழங்குவதுபோல், இப்போது “அம்பலப்புழை” என வழங்கப் பெறும் கோட்டம்பலத்தில் உயிர்விட்டமையால், இவன் இப்பெயர் பெற்றான்.
இவன் பாடிய பாடல்கள் அகத்தில் ஒன்று,72 புறத்தில் ஒன்று73 உள்ளன. முன்னதில் மலை அருவி எழுப்பும் இன்னிசையில் உறங்கும் குழவியைக் காத்து நிற்கும், களிறு, பிடிகளின் அன்பையும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், பெருஞ்சோறு வழங்கும் குலப்பெருமையையும் பாராட்டியுள்ளார். பின்னதில், பிரியேன், பிரியின் உயிர் வாழேன்" என அளித்த உறுதிமொழிக்கு மாறாக, மனைவி இறந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருக்கும் தன் நிலைக்கு வருந்தியிருப்பதன் மூலம், காதல் வாழ்க்கையின் பண்பை விளக்கியுள்ளார்.