பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சோழர்

மூவேந்தருள் நடுவண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவர் சோழர். கிள்ளி, கிள்ளிவளவன். செம்பியன், சென்னி, வளவன், எனவும் அழைக்கப்பெறுவர். சோழ அரசின் தோற்றமும் தொன்மையும் அறிய இயலாதன வாதலைப் போலவே, அவர் பெயரின் தோற்றக் காரணங்களும் அறியப்படாதன. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கு உரியது என்றாலும், அப்பெருமை சோழர்க்கும் உரித்து. சோழ நாடு, செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த பன்னிரு நாடுகளில், புனல் நாடு, பன்றி நாடு, அருவா நாடு என்ற நாடுகளை உள்ளடக்கிய இன்றைய, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை வட, தென்னார்க்காட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நாடாம். ஆர்க்காடு, உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, சாய்க்காடு, தலைச் செங்காடு, நெய்தலங் கானல், புகார், போர், பிடவூர், வல்லம், வெண்ணி என்ற இவையெல்லாம் சோழ நாட்டுப் பேரூர்களே ஆயினும், தலைககராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறையூரும், பின்னர்ப் புகாருமே ஆகும்.

சோழ நாடு, சங்க இலக்கியங்களில் பாராட்டப் பெற்றிருப்பதோடு, பிறநாட்டு வரலாற்றுப் பேரறிஞர்களாலும் பாராட்டப் பெற்றுளது. கி. பி. 81—96ல், எழுதப்பெற்ற, "செங்கடற் செலவு" எனும் பொருளுடைய "பெரிபுளுஸ் மாரிஸ் எரித்ரியா" என்ற நூலின் ஆசிரியர், புகாரைக் "கடற்கரை நாடு" என்றும், உறை-