பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னி

"சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது" எனக் கொளு கூறும் பாட்டிலும்,8 "சோழன் நலங்கிள்ளியை ஆலத்துார் கிழார் பாடியது" எனக் கொளுகூறும் பாட்டிலும்9, மூலத்தில் "சேட்சென்னி நலங்கிள்ளி" என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், "இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது" எனக் கொளுகூறும் பாட்டில்,10 பாட்டுடைத்தலைவன் பெயர் சேட்சென்னி நலங்கிள்ளி என வராது, "இயல்தேர்ச்சென்னி" என்றே வந்துள்ளது. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியனவாக வரும் பாடல்கள் நான்கில் [புறம். 31, 32. 33, 382] 382ஆம் பாட்டில், பாட்டுடைத் தலைவன் பெயர், "நலங்கிள்ளி;, என்றே வந்துள்ளது. "சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது [புறம் :27, 28, 29, 30] என்றும், அவனைக் கோவூர் கிழார் பாடியது [புறம்.31 32, 33, 382] என்றும், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது]புறம்:61] என்றும். புறம். 73, 75 பாடல்களைக் குறிப்பிடும் போது நலங்கிள்ளி பாடியது என்றும் கூறியிருப்பதை நோக்க, இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி வேறு, நலங்கிள்ளி, வேறு என்பது உறுதியாகிறது.