44
தமிழரசர்கள், தாம் பெற்ற வெற்றிகளைத் தம் பெயர்களுக்கு முன்னால் இணைந்துக் கொண்டு "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" என்பது போல் வழங்கப் பெறுதல் போல அரசர்கள் உயிர்விட்ட இடங்களை அவர்தம் பெயர்களுக்கு முன் இணைத்து இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, குராப் பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என வழங்குவது போல் இவன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என அழைக்கப்பெற்றான்.
நிலையாமையை விளங்கக்கூறி, "வருந்தி வருவார்க்கெல்லாம் வாரி வழங்கிப் புலவர்பாடும் புகழ் உடையோனாகுக" எனப் பாராட்டியுள்ளார் உறையூர் முதுக்கண்ணன் சாத்தனார்11 அவன் நாட்டு வளங்களை விளங்கக் கூறி அவனைப் பகைத்தவர் வாழ்ந்ததும், இல்லை; அவன் அடிபணிந்தவர் வருந்தியதும் இல்லை என அவன் ஆற்றல் பெருமையைப் பாராட்டியுள்ளார் கோனாட்டு எறிச்சிலுார் மாடலம் மதுரைக் குமரனார்12. அவன் படைவரிசையுள் முதலில்செல்வார் 'பனைநுங்கு தின்ன, இடையில் செல்வார் பனம்பழம் தின்ன, ஈற்றில் செல்வார் பனங்கிழங்குதின்ன, நீண்டது அவன்படை' எனப்படைப்பெருமையைப் பாராட்டியுள்ளார் ஆலத்துரர் கிழார்.13