பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

 கருவூரில் இருந்த கரிகாலன் கழுத்தில் மாலை சூட்டிக் கொண்டு வந்தது எனக் கற்பனைக் கதை ஒன்றைக் கூறுவர். அது நம்புதற்கு உரியது அன்று; காரணங்கள் பல உள; விரைப்பின் பெருகும் என அஞ்சி ஈண்டு எடுத்து வைக்கப்படவில்லை.

தனக்குரிய அரியணையில் முறைப்படி அமர்ந்துவிட்ட கரிகாலன் தன் தாயத்தார்க்குத் துணை நின்ற பகைவர் பலரையும் வெற்றிகொள்ள வேண்டியிருந்தது. வெண்ணி வாயில் என்ற இடத்தில் நடைபெற்ற அவன் கன்னிப் போரில் சிங்கக்குட்டி ஒன்று தன் முதல் வேட்டையிலேயே, பல களிறுகளைக் கொன்றதே போல், தன் நனி இளமைப்பருவத்திலேயே, தன்னை வந்து எதிர்த்த சேர, பாண்டியர்களையும், பதினோரு வேளிர்களையும் வென்றான். வேந்தர் இருவரும் இறந்தனர். அவருள் சேரன் மட்டும் தான் பெற்ற புறப்புண்ணுக்கு நாணிவடக்கிருந்து உயிர் விட்டான்.39

வெண்ணிப் போரில் தோற்ற வேளிர் பதினொருவரில் உயிர் பிழைத்திருந்த ஒன்பதின்மர்களை மீண்டும் வாகைப் போரில் எதிர்த்து வென்று, அவர் வெண்கொற்றக் குடைகளைக் கவர்ந்து கொண்டான் கரிகாலன்.40

வெண்ணி, வாகைப் போர் வெற்றிகளால் மட்டும், பகைவர் தனி இளமைக் காலத்தே தன்னைச்சிறையிட்டதால் கொண்ட சினம் தணியாதாகவே, கரிகாலன், தமிழ் நாடெங்கும் சென்று, ஒளியர்; அருவாளர், வடவர் குடவர், தென்னவர், பொதுவர் இருங்கோவேளிர் என்ற பலரையும் வென்று வீறுகொண்டான்.41