பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

 நாட்டு நெல் வளத்திற்கு வழிகண்ட கரிகாலன், செல்வ வளத்திற்கும் வழி காண வேண்டிக் காவிரி கடலோடு கலக்குமிடத்தில் உள்ள புகாரைச் சிறந்த கடல் துறையாகவும் உயர்த்திக் கடல் வாணிபம் பெருகச் செய்து நாட்டுச் செல்வ வளத்தையும் பெருக்கினான்.

நாடு எவ்வளவுதான் வயல் வளத்தாலும், வாணிக வளத்தாலும் சிறந்து விட்டாலும், நாட்டில் வழக்குகள் எழாது இருந்து விடுவதில்லை, மாறாக அப்போது தான் வழக்குகள் மிகும். அத்தகு வழக்குகளை விசாரித்து நீதி வழங்க, தலைநகர் உறையூரில் அறங்கூரவை அமைத்து, அதன் பொறுப்பை, ஆன்றவிந்தடங்கிய ஆன்றோர் பால் ஒப்படைத்ததோடு, அமையாது, தானும் அமர்ந்து, இத்துணை இளையோன், நரை முதிர் பெரியோர்களாலும் தீர்க்க முடியாத வழக்குகளையும் தீர்த்து வைக்கின்றானே, என்னே இவன் இளமையின் முதுமை என நாட்டவர் வியக்க நீதியும் வழங்கி வந்தான்.

நாட்டில் பகை இல்லை, பிணி இல்லை. ஆகவே, புனலாடல் போலும் விழாக்களில் இன்பங்காணவும் அவன் தவறவில்லை. காவிரியில், கழார்த்துறையில், ஆண்டுதோறும் புனல்விழாக் கண்டு மகிழ்வன் அத்தகைய விழா ஒன்றில், தன் மகள் ஆதிமந்தியாரின் கணவன் ஆட்டனத்தி ஆடத் தொடங்கியபோது, காவிரிக்குப் புதியவனாகிய ஆட்டனத்தி காவிரியின் போக்கு அறியாது ஆடத் தொடங்கவே ஆறு அவனை அடித்துக் கொண்டு போய்விட்டது; அது அறிந்த, கரிகாலன் அவனை மீட்கத்தானும் முயற்சிக்க,கணவன்