iv
புலவர். கா. கோவிந்தனார் அவர்கள்
புலவர்களுள் பெரும் புலவராய் விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின் "புலவரேறு" பட்டம், தமிழக அரசின் "திரு.வி. க. விருது", மதுரை.காமராசர் பல்கலைக் கழகத்தின் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" பட்டம், போன்ற சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களது தமிழ்ப்பணி பொன்விழா கண்ட பெருமையினையுடையது.
"என் தமிழ்ப்பணி" என்ற தலைப்பில் புலவர் அவர்கள் எழுதிய கட்டுரையில், "என் எழுத்துப்பணி தொடரும். குறள்பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன் "கல்வி கரையில, கற்பவர் நாள் சில" காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி தொடரும்' என்று தம் தமிழ்ப் பணியைத் தொடரவேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால் காலம் இடம் தரத்தவறி விட்டதனால் முற்றுப் பெறாத நிலையிலேயே அவருடைய எழுத்துப்பணி எச்சமாகவே நின்று போயிற்று. காலம் செய்த கொடுமை அது!
தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும் உயர்வு தேடித் தரும் வகையில், எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள், 'செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல்' போல தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார்.