பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58



செங்கணான்

சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடிய, "குழவி இறப்பினும்" எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாட்டின்68 அடியில் கொடுத்திருக்கும் கொளு, பின்வருமாறு வருகிறது. "சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானோடு, திருப்போர்ப் புறத்துப்பொருது. பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு." இதிலிருந்து திருப்போர்ப்புறத்தில் நடைபெற்ற போரில், சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்று, சிறைப்பிடித்து வந்து, சோழ நாட்டுக் குடவாயில் கோட்டத்துச் (இன்றைய கும்பகோணம்) சிறையில் அடைத்த செங்கணான் என்பவன் வரலாறு தெரிகிறது.

கழுமலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் செங்கண்மால், செங்கண்சினமால், செம்பியன் என்றெல்லாம் அழைக்கப் பெறும் சோழ அரசன் ஒருவன் "வஞ்சிக்கோ" "கொங்கர் படை கொண்டான்" என அழைக்கப்பெறும் சேரன் ஒருவனை வென்று, சிறை கொண்டு குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான் எனவும், பொய்கையார் என்ற புலவர், களவழி நாற்பது பாடிச் சோழனைப் புகழ்ந்து பரிசாக, சேரனைச் சிறை மீட்டார், எனவும், களவழி நாற்பது கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்கச் சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய நூல்கள் உணர்த்துகின்றன.69