பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

 சென்று அழித்துவிட எண்ணி விட்டான். ஆவூர்க் கோட்டையை வளைத்துக் கொண்டான். நெடுங்கிள்ளி வெளி வந்து போரிட நினையாது வாயிற் கதவுகளை அடைத்து விட்டு உள்ளேயே அடங்கிக் கிடந்தான். அகத்தே உள்ள மக்களுக்கு, உணவு முதலாயின கிடைக்காமல் போக, வருந்தினர். அது அறிந்த கோவூர்கிழார் என்ற புலவர், கோட்டை அகத்தே சென்று "ஆற்றல் இருந்தால் வெளியே சென்று பகைப் படையை வென்று ஓட்டு; மக்களைப் பசி, பிணி, அண்டாதவாறு காக்க வேண்டும் என்ற அறவுள்ளம் உடையாயின், வாயிலைத் திறந்துவிடல் வேண்டும், இரண்டில் எதையும் செய்யாது அடைத்துக் கிடத்தல் அறமோ, மறமோ ஆகாது" என அறிவுரை கூறினார்.80

கோவூர்கிழார் கூறிய அறிவுரை கேட்டு ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளிபால் ஒப்படைத்து விட்ட நெடுங்கிள்ளி, உறையூர்க்கோட்டைக்குச் சென்று அடைத்துக் கொண்டான். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி உறையூர்க்கோட்டையை உடைமையாக்கிக் கொண்டதையும் பொறுக்கமாட்டாது, அக்கோட்டையையும், வளைத்துக் கொண்டான். அது அறிந்த கோவூர்கிழார் இம்முறை நலங்கிள்ளியை அணுகி, "உள்ளிருப்போன், உன் குலப் பகைவர்களாகிய சேரர், பாண்டியர் குடியில் வந்தவன் அல்லன்; கோட்டையை வளைத்துக் கொண்டிருக்கும், நீயும், சேரர் பாண்டியர் குடியில் வந்தவன் அல்ல; இருவருமே ஒரு குடியில் வந்தவர்கள். ஒரு குடியில் வந்தவர்கள், தமக்குள்ளாகவே பகைத்துப் போர் தொடுத்து நிற்பது பகை மன்னர் எள்ளி நகையாடவே இடம் செய்து விடும்; ஆகவே முற்றுகையைக்