பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. பாண்டியர்

பாண்டிநாடு "தென்புலம்" என்றும், பாண்டிய மன்னர் "தென்புலம் காவலர் பெருமான்" என்றும் அழைக்கப் பெறுவர். தென்புலம், பழநி மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதியாகும். பொன்னும், முத்தும் பதிக்கப் பெற்ற வாயிற்கதவுகளைக் கொண்ட கபாடபுரம் பாண்டியர் தலைநகராக, வால்மீகி இராமாயணத்திலும், குமரியாட வந்த அர்ச்சுனன், பாண்டியன் மகளை மணந்தான் என வடமொழி பாரதத்திலும், இலங்கை முதலாம் அரசன்விஜயன், பாண்டியன் மகளை மணந்தான் என மகாவம்சம் கூறுவதாலும், கி. மு. 20ல் உரோம நாடாண்ட அகஸ்டஸ் மன்னன் பால், பாண்டியன் அரசியல் தூதுவனை அனுப்பினான் என, அந்நாட்டு வரலாறு கூறுவதாலும், உரோமப் பொன் நாணயங்கள், பாண்டி காட்டில் பெருகக்கிடைப்பதாலும் பாண்டியர் பழமை, பெருமைகளை உணரலாம், பாண்டி நாட்டுக் கொற்கைத் துறைமுத்து, பண்டைய, உலக அரசுகளெல்லாம், விரும்பி வாங்கிய வணிகப் பொருளாம்.

பாண்டிநாடு பெருமை வாய்ந்தது என்ற அப்பெருமையோடு, முதற்சங்கம் இருந்த தென்மதுரையையும், இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தையும், கடல் கோளுக்கு இரையாகக் கொடுத்த பேரிழப்பினையும் பெற்றது. பாண்டியர் தலைநகர் கூடல் எனவும் அழைக்கப்பெறும் மதுரை மாநகராம்.