பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


நடுவே, அத்தகைய அரண் இருப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதாகாது என உணர்ந்து, அதை, மீண்டும் புதுப்பிக்க இயலாவாறு அழித்துவிட்ட காரணத்தால், இவன் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி எனப் பெயர் பெற்றான். இவ்வரிய செயலைப் பாராட்டியவர் புலவர் ஐயூர் மூலங்கிழார். 11

மூவேந்தர்கள், ஒருவரோடொருவர் பகைகொண்டு அழிந்து ஒழியும், இயல்புக்கு மாறாக, இவன், தன் காலத்தில் சேரநாடாண்டிருந்த மாரிவெண்கோவுடனும், சோழ நாடாண்டிருந்த இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடும் நட்பு பூண்டு வாழ்ந்திருந்தான். இப் பெருமையை ஒளவையார் பாராட்டியுள்ளார்.12

புலவர்கள் போற்றும் புரவலனாகிய இவன் தானும் ஒரு புலவனாவன். கணவன், பிரிந்திருந்தபோது, அவன்பால் தவறுகளையே காண்பாள் ஒருத்தி, அவன் வந்ததும், அத்தவறுகளையெல்லாம் மறந்துவிடும் நல்ல பண்பு அமைந்த தமிழ் மகள் ஒருத்தியின் மன நலம் விளங்கும் அழகிய பாடலைப் பாடியுள்ளார்.13

கீரஞ்சாத்தன்

இவனைப் பாடிய புலவர் ஆவூர் மூலங்கிழார்.14 பாடல் மூலத்தில் இவன் பெயர், "பெரும்பெயர்ச் சாத்தன்" என்று மட்டுமே வந்துளது. கொளு "பாண்டியன் கீரஞ்சாத்தன்" என்கிறது. அதனால் இவனைப் பாண்டியர் குலத்தவன் என அறிகிறோம். சிறந்த நாற்படையாளன், சிறந்த வீரன், சிறந்த கொடையாளி.