பக்கம்:தமிழக வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

103


கவர்ந்ததையும் ஸ்மித்து நன்கு காட்டியுள்ளார்.[1] மாற்றான் செல்வத்தைப் புகழ்ந்தால் ஒரு சிலருக்குக் கோபம் வருவது இயற்கைதானே! அந்த முறையில் இயல்பாகவே மோரியருக்குத் தமிழ் மண்ணின் மேல் கோபம் எழுந்திருக்கும். அதைத் தீர்த்துக் கொள்ளச் சமயம் பார்த்திருப்பர். அவர்கள் கோசர் அழைப்பினை ஏற்றுத் தென்கோடியில் வாழ்ந்த மோகூர் மன்னனை முறியடித்து வெற்றி கண்டு விட்டனர். வெற்றி கண்டுவிட்டனரே தவிர, அவர் நெடுங்காலம் இங்கே தங்கியதாகத் தெரியவில்லை. சந்திரகுப்தனே போருக்கு வந்திருக்க வேண்டுமென்பதில்லை. அவன் கோசருக்காக உதவிக்கு ஆள் அனுப்பியிருப்பான் என்று கொள்வதும் பொருந்தும். எனவே மாமூலனார் குறித்த மோரியர், பாடலியில் ஆண்ட சந்திரகுப்த மன்னன் பரம்பரையினரே என்பது தேற்றம். தம் நூலிலேயே[2] நந்தரைப் பற்றி மாமூலர் குறிப்பிட்டார் என்பதைக் காட்டுகிறார் அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள். நந்தரைக் கூறியவர் அவர்தம் பகைவராகிய மோரியரைக் கூறியிருக்கமாட்டார் என்று புதுப்புது வகையில் ஆராய்ச்சி செய்தலும் சொற்களை வேண்டியவாறு மாற்றுதலும் பொருந்துவனவாகா. நந்தர் பரம்பரையில் பலர் தென்னாட்டுக்கு வந்துள்ளனர். சந்திர குப்தன் மகனான பிந்துசாரன் படை எடுத்து வந்து தென்னாட்டை வென்று கொண்டான் என்று வரலாற்று வகையில் தாரநாத்து என்பவர் கூறுகின்றார். ஆனால், பிள்ளை அவர்கள் அக்கூற்றையும் மறுக்கிறார். ‘தாரநாத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர், எனவே, அவர் கூற்றுப் பொருந்தாது.’ என்பது பிள்ளை அவர்களின் வாதம். அப்படியாயின், இன்னும் முந்நூறு


  1. The Early History of India, By W. Smith P 124
  2. இலக்கிய தீபம் : மோரியர் தென் இந்தியப் படை எடுப்பு, பக். 131-144.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/105&oldid=1357743" இலிருந்து மீள்விக்கப்பட்டது