பக்கம்:தமிழக வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழக வரலாறு


பின் குமரிமுதல் இமயம்வரை ஒரே திராவிட நாகரிகமே பரவி இருந்ததென்றும், எனவே ஒருகாலத்தில் இன்று தென்னாட்டில் வாழும் திராவிடரே இந்தியா முழுவதும் பரவி இருந்தனர் என்றும் கூறுவர். அக்காலம் இன்றைக்குச் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், பிற்காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து பல பகுதிகளில் பிரிந்து சென்றதாகக் கூறப்படும் ஆரியரில் ஒரு பகுதியார் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, சிந்து நதியைக் கண்டு, அங்கு வாழ்ந்த பழங்குடிகளைப் பின்னடையச் செய்து நிலைபெற்றனர்; அதன் பின் கங்கை நதிக்கரையிலும் பரவினர். அந்த வடவிந்தியப் பகுதிகளிலெல்லாம் பரவியிருந்த மக்கள் மெள்ள மெள்ளத் தென்னிந்தியாவில் உள்ளவரோடு வந்து கலந்து விட்டனர் என்பர் வரலாற்றாளர். எனவே, இன்றைய தென்னாட்டுக் குடிகள் ஒரு காலத்தில் வட நாட்டிலும் இருந்தார்கள் என்பது உண்மை.

இனி, இவர்கள் தென்னாட்டுக்கு வரும்போது இங்கு இருந்தவர்களும் அதே இனத்தவரா அன்றி வேறு பழங் குடிகளா என்பதும் ஆராய்தற்கு உரியது. சிலர் திராவிடரும் ஆரியரைப் போன்று அவர் வருமுன் வடமேற்குக் கணவாய் வழியாக வந்தவர்களே என்பர்; பின்பு அவர்கள் ஆரியர் வருகை ஒட்டி மெள்ள மெள்ளத் தென்னகம் வந்து குடியேறி நிலைத்து விட்டார்கள் என்பர். சிலர் தெற்கே பரந்திருந்த லெமூரியாக் கண்டத்தில் தோன்றி வளர்ந்த பழங்குடிகளே திராவிடர்கள் என்றும், அவர்தம் வாழ்வு பரந்த இந்தியா நாடு முழுவதும் இருந்தனெவும் கூறுவர். தென்பகுதி கடலால் கொள்ளப்பட்ட பிறகு–தென்மதுரையும் கபாட புரமும் குமரிக் கோடும் நாற்பத்தொன்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/112&oldid=1357869" இலிருந்து மீள்விக்கப்பட்டது