பக்கம்:தமிழக வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

111


நாடுகளும் அழிந்துபட்ட பின், வடக்கு நோக்கி இமயம் வரை சென்றார்கள் என்றும் கொள்வர். சிலப்பதிகாரத்தே இவர்கள் கூற்றை மெய்ப்பிப்பது போன்று,

‘பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!’
(11:19-22)

என்ற அடிகள் வருகின்றன. வரலாற்றுக்கு ஒவ்வாத காப்பியம் எனச் சிலர் சிலப்பதிகாரத்தைக் கூறினும், இது போன்ற கூற்றுகளுக்கு ஆதாரமாக, நில நடுக்கங்களும், தோற்ற அழிவுகளும் உள்ளன என்பதை நிலநூல், விளக்கமாக ஆராய்ச்சியாளர் எழுதியதோடு, இழந்த லெமூரியாக் கண்டத்தை பற்றிய குறிப்புகளையும் காட்டுகின்றது. எனவே, மிகப் பழைய நிலமாகப் பேசப் பெறும் லெமுரியாக் கண்டத்தே தோன்றிய மக்களினம் மெள்ள மெள்ள ஊழிதோறூழி வடக்கு நோக்கிக் சென்று நிலைபெற்றது என்றும், அவரே திராவிடர் என்றும், அவர் தம் வாழ்வின் உச்ச நிலையிலே இமயம்வரை சிறந்திருந்தார்கள் என்றும் கொள்ளுதல் பொருத்தமாகும். ஆனால், இவையெல்லாம் வரலாற்று எல்லைக்கு அப்பாற்பட்டவையாகும். சிறந்த ஆய்வாளர் சிந்தை செய்து முடிவு காணல் நலம் பயப்பதாகும்.

அகத்தியர் யார்?

இந்தியாவிற்கு ஆரியர் வந்த பிறகும் வடக்கும் தெற்கும் தொடர்பு கொண்டிருந்தன எனலாம். அகத்தியரைத் தமிழுக்குத் தலைவர் என்று கூறும் புராண மரபும் உண்டு. அகத்தியரை ஆரிய முனிவர் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/113&oldid=1357875" இலிருந்து மீள்விக்கப்பட்டது