பக்கம்:தமிழக வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

117


ஆண்ட நிலம் நான்கு வகையாக இயற்கையை ஒட்டிப் பகுக்கப்பட்டதைத் தொல்காப்பியரே காட்டுகின்றார். ஒவ்வொரு நிலத்தையும் தனித்தனியாகப் பிரித்துக் காட்டி ஒவ்வொன்றிற்கும் உரிய சிறு பொழுது பெரும் பொழுதுகளைக் கூறி, அவ்வந் நிலத்து வாழும் மக்களைப் பற்றியும் அவர்தம் ஒழுகலாறுகள், வாழ்க்கை முறைகள், உணவு, உடைவகைகள் ஆகியவற்றையும் விளக்கி, அன்று, மக்கட் சமுதாயம் எப்படி அமைந்த தென்பதையே திட்டமாகக் காட்டியிருக்கின்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். தொல்காப்பியமும் அகத்தியமும் இலக்கண நூல்கள். இலக்கணம் உண்டாவதற்கு நெடு நாட்களுக்கு முன்பே இலக்கியம் தோன்றியிருக்க வேண்டும். ‘இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ மரபாகும். ‘இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்’ என்பது அகத்தியச் சூத்திரம். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு நெடுநாட்களுக்கு முன்பே தெளிந்த இலக்கியங்கள் உருவாகியிருக்கும். இலக்கியங்கள் மக்கள் வாழ்வையே அடிப்படையாகக் கொண்டு நிற்கின்றமையின், அவர்தம் வாழ்வும் சிறந்து விளங்கியிருந்ததாக வேண்டும். தொல்காப்பியத்தின் மரபியல் சூத்திரங்களில் வரும் பல பொருள்களும் அவை பற்றிய விளக்கங்களும் அக்காலத்தில் மக்கள் தெளிந்த அறிவினை உடையவராக இருந்தனர் என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றன. விலங்குகளிலும் ஆண் பெண் இனங்களைப் பிரித்து அவற்றிற்குத் தனித் தனியாகப் பெயரிடும் வழக்கத்தை மரபியல் நமக்கு விளக்குகிறது.[1] விலங்கினங்களையும் பறவைகளையும் பல்வேறு வகையில் வேறுபடுத்திக் காட்டி, அவற்றின் தன்மைகளையும் விளக்கும் சூத்திரங்-


  1. தொல், மரபியல் சூ. 64
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/119&oldid=1357980" இலிருந்து மீள்விக்கப்பட்டது