பக்கம்:தமிழக வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழக வரலாறு


தொல்காப்பியர் காலம் :

ஆரியர் கங்கை சிந்து சமவெளியில் தங்கித் தென்னாட்டுக்கு வந்து கலந்த பின்புதான் இந்தப் பிரிவுகளும் இங்கு ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும், எனவே, ஆரியர் தென்னாட்டுக்கு வந்த பிறகுதான் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுவர். சிந்துவெளி நாகரிக காலத்திற்குச் சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொல்காப்பியம் எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆகையால், அக்கால எல்லையில் வட நாட்டுக்கு வந்த ஆரியர் உடனே தென்கோடியிலும் தம் வாழ்வும் பிறவும் பொருந்துமாறு அந்நாட்டு மக்களோடு கலந்து விட்டார்கள் என்று கொள்வது பொருந்துமா என ஆராய வேண்டும். சிலர் அகத்தியர் தொல்காப்பியர் கதையையும் அவருக்கு இருந்த ‘திரணதூ மாக்கினி’ என்ற பெயரையும் கொண்டு, ஆரியர் மரபினரே தொல்காப்பியர் என்று கூறுவர். ஆனால் அது பொருந்தாது. வெறுங் கன்ன பரம்பரைக் கதைகளையும், கற்பனை எழுத்துக்களையும் வைத்துக் கொண்டு வரலாறு எழுதப் புகின், அது மற்றொரு கதையாக முடியுமேயன்றி, வரலாறு ஆகாது. அன்றிக் கதை வழியே கொள்ளின், தொல்காப்பியரும் வள்ளுவரும் ‘களவிய’லின்படி இன்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தவராக வேண்டும். அந்தக் காலத்தில் ஆரியரைப் பற்றி எண்ணக் கூட இடமில்லை. ஆகவே, தமிழ் நாட்டில் ஆரியர் கலாச்சாரம் கலந்த பிறகுதான் தொல்காப்பியர் வாழ்ந்தாரா அன்றி முன்னரே வாழ்ந்தாரா என்பதை ஆராய்ந்து முடிவுகாணல் வேண்டும். தொல்காப்பிய எழுத்து முறையும், சொல்முறையும், பொருளதிகாரத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/122&oldid=1358004" இலிருந்து மீள்விக்கப்பட்டது