பக்கம்:தமிழக வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்


சில பொருள்களும் வடமொழிச் சார்பு பெற்றனவாகக் காண்கின்றன என்பர். அவற்றை எல்லாம் ஒருவாறு ஆராயின், தொல்காப்பியர், வடமொழி வாணர் தமிழ் நாட்டில் வரத் தொடங்கிய அந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். வடநாட்டுத் தொடர்பு இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே, மோரியர் நந்தர் காலத்திலிருந்தே இருப்பதாகக் காண்கின்றமையின், அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் வடவர் இங்கு வந்திருப்பர் என்பதிலும் அக்காலத்திலேயே தொல்காப்பியர் வாழ்ந்தார் என்பதிலும் தவறில்லை. ஆயினும், இதுபற்றி அறிஞர் நன்கு ஆய்ந்து முடிவு காணல் வேண்டும். எப்படியாயினும், தொல்காப்பியர் காலத்தில்–இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு நல்ல பண்பட்ட முறையில் சிறக்க வாழ்ந்து வளம் பெற்று நின்ற நாடாய் - பிற கலப்பு இன்றி விளங்கிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கடைச் சங்கம் காலம் :

இனி, கடைச்சங்க காலத்தை நோக்குவோம். கடைச் சங்க காலம் பலருடைய முடிவின்படி கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளுக்கு உட்பட்டதாகும் ஒரு சிலர் அக்காலத்தை மிகவும் பிற்படக் கொண்டுவர விழைந்தார்களாயினும், பிற சரித்திரச் சான்றுகளுடன் பொருத்திக் காணும் போது, அந்தப் ‘பிற்காலம்’ என்ற கூற்றுப் பொருந்தாது. மேலோங்கிச் சிறந்து நின்ற அந்தச் சங்க காலத்தை ஒட்டியே ஓர் இருண்ட காலமும் பின் பல்லவர் எழுச்சியும் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடைச்சங்க காலத்தைத் திட்டமாக வரையறுக்கத் தமிழ் இலக்கிய வரலாற்றுச் சான்று ஒன்றும் கிடைக்கவில்லை. சேரன் செங்குட்டுவன் கடைச்சங்க காலத்து இறுதியில் வாழ்ந்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/123&oldid=1358011" இலிருந்து மீள்விக்கப்பட்டது