பக்கம்:தமிழக வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

125


காலனைத் தவிர்த்து வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, உருல பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆகிய இரு முன்னோர் கரிகாலனுக்கு இருந்ததாகக் கூறுவர். இளஞ்சேட் சென்னியே கரிகாலன் தந்தை என்பர் இவர்களன்றி, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, கிள்ளிவளவன் என்னும் சோழர்கள் அக்காலத்தில் வாழ்ந்தமையும், அவர்களுள் சிலர் தம்முள் மாறுபடப் புலவர்கள் இடை நின்று சந்து செய்தமையும் புறநானூற்றால் அறியலாகும். அவர்கள் மாறுபட்டுப் போர் விளைத்த நிலைகண்டு அக்காலத்துப் போர் பற்றி அறிய இயலும். இவர்களையன்றிக் கோப்பெருஞ் சோழன் போன்ற சோழர் பரம்பரையில் தோன்றிய அரசர்களும் காணப்படுகின்றார்கள். இவர்தம் தலைநகரம் உறையூர். புகார், கரிகாலன் காலத்துக்குப் பின் கடலால் கொள்ளப்பட்டது போலும் மணிமேகலையில் கூறப்பெறும் வரலாற்று வழி சரியோ தவறோ! ஆயினும், பட்டினப்பாலையால் பாராட்டப் பெறுகின்ற அத்துணைப் பழம்பெருநகரம் கரிகாலனுக்குப் பின் இல்லையாய்க் கடலுள் மூழ்கியது எனக் கொள்ளல் பொருத்தும். கடற்கரையில் இருந்த தலைநகரத்தை உளநாட்டுக்கு மாற்றி விட்டார்கள் போலும்! எனவே, உறையூர் தலைநகராய் அமைந்தது. மதிற் சுவரும், காவற் காடும், பிற அங்கங்களும் பொருந்த உறையூர் சிறந்த தலைநகராய் அக்காலத்திருந்தது. சோழர் அவையில் கோவூர்கிழார் போன்ற சிறந்த புலவர்களும் அறிஞர்களும் வீற்றிருந்தார்களென்றும், அரசியலில் தவறு நேர்ந்துழி அவர்கள் இடித்துரைத்துத் திருத்தி வந்தார்களென்று அறிகிறோம். இச்சோழ மன்னர்தம் வரலாறுகள் பற்றியும் செயல் பற்றியும் உள்ள புறநானூற்றுப் பாடல்களை இன்று தமிழ்ப் புலவர் பலர் பலப்பல வகையில் ஆராய்ந்து பல்வேறு நூல்களை வெளியிட்டுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/127&oldid=1358346" இலிருந்து மீள்விக்கப்பட்டது