பக்கம்:தமிழக வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழக வரலாறு


கொண்டே யிருக்கின்றனர். எனவே, நாம் இந்த அளவில் நிறுத்தி மேலே செல்வோம்.

பாண்டியர் :

இனிப் பாண்டியரைப் பற்றிக் காண்போம்; பாண்டியர் வரிசையில் சிறந்த மன்னனாகக் காணப்பெறுகின்றவன் நெடுஞ்செழியன் ஆவன்; அவன் புலவனுமாவன். இளமையிலேலே சிறந்த வீரனாய் விளங்கியவன். மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி அவனைப் பற்றியதேயாகும். அவனைப் பற்றிய பாடல்களும் அவன் பாடிய பாடல்களும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. கடைச்சங்ககாலப் பாண்டியருள் மிகப்பழையவன் முடத்திருமாறன் எனவும், அவன் காலத்திலேயே கடல் கோள் நிகழ்ந்து, கபாடபுரமும் பாண்டி நாட்டின் பெரும் பகுதியும் அழிந்தன எனவும் காட்டுவர் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்[1]. முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈறாகப் பல்வேறு பாண்டிய மன்னர் கடைச்சங்க காலத்திலும் அதற்கு முன்பும் தமிழகத்தில் ஆட்சி புரிந்தனர்: அவர்கள்தாம் தமிழ்நாட்டுப் பழைய மன்னர்கள் என்பர் சில ஆராய்ச்சியாளர். பண்டையர் என்பதே பாண்டியராயிற் றென்றும், அனைவருக்கும் முன் வாழ்ந்தவராதலின் அவரைப் பண்டையரென்று வழங்கினரெனவும் கூறுவர். அப்பாண்டிய மரபினர் வாழ்ந்த தென்மதுரை, கபாடபுரம் முதலிய பழம்பெரு நகரங்களும் அவற்றைச் சார்ந்த நிலப்பகுதிகளும் நெடுநாளைக்கு முன்பே கடலால் கொள்ளப்படடமையின், அப்பழங் காலந்தொட்டே அவர்கள் வாழ்ந்த காரணத்தால் அவர் தம் கூற்றுப் பொருந்துமோ என எண்ண வேண்டியுள்ளது.


  1. பாண்டியர் வரலாறு, பக். 9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/128&oldid=1358350" இலிருந்து மீள்விக்கப்பட்டது