பக்கம்:தமிழக வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

ஏன்—வடவிந்தியப் பகுதி, இமயமலை ஆகிய இவற்றைக் காட்டிலும் தொன்மை வாய்ந்தது என வரையறை செய்துள்ளனர். ஆம்! அத்கைய தொன்மை வாய்ந்த நிலப் பரப்புக்கு வரையறுத்த வரலாறு இல்லை என்பதைத் தமிழ்நாடு இன்று நன்கு உணர்ந்துள்ளது. உலக நாடுகளெல்லாம் தத்தம் வரலாற்றை எழுதி வெளியிட்டு வரும் இந்நாளில் தமிழக வரலாறு முழுதும் ஒழுங்காக வரையறுக்கப் பெறவில்லை தமிழ்நாட்டு அரசாங்கம் இத்துறையில் முயலும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. தக்கவர் வழி அப்பணி தொடங்கப் பெறின் மிக்க பயன் உண்டாகும் என நம்புகிறேன்.

வரலாறு எழுத வேண்டும் என்ற உணர்வு கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான் நன்கு வளர்ந்துள்ளது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நம் தமிழகம் தனித்தில்லாது பரந்த பாரதத்தோடு இணைந்து விட்டது. வரலாறுவளர்ந்த காலமும் இதுவேயாகும். இந்தியாவைக் கண்டு அதுபற்றி எழுதவிரும்பும் மேலைநாட்டினர் பலரும் தில்லியையும் அதைச் சார்ந்துள்ள கங்கை, சிந்து சம வெளியையும் பற்றியே வரலாறு வரைந்துள்ளனர். தமிழ் நாட்டைப் பற்றி அவர்கள் அதிகம் அறிந்தார்கள் இல்லை. தமிழ் நாட்டிலேயே வந்து தங்கியிருந்த சில மேலை நாட்டுப் பாதிரிகள் இத் தமிழ் நலத்தால் கட்டுண்டு, தத்தம் மொழியில் சில தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்த்தார்கள். இம் மொழி பற்றிய இலக்கணங்களை எழுதி வைத்தார்கள்; எனினும், இந்நாட்டு வரலாற்றை யாரும் எழுதவில்லை.

வரலாற்று வழி

இந்திய அரசாங்கம் இந்த நாட்டுப் பழம் பொருள்களைப் பற்றி ஆராய வேண்டும் எனக் கருதியது. குமரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/13&oldid=1356952" இலிருந்து மீள்விக்கப்பட்டது