பக்கம்:தமிழக வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழக வரலாறு


சேரர் :

சேரநாடு அக்காலத்தில் தமிழ் வழங்கும் நாடாய் இருந்தது. இன்று மலையாளம் வழங்கும் பகுதி முழுவதும் அன்று தமிழ் வழங்கும் பகுதியாகவே இருந்தது. நெடுநாளைக்குப் பிறகே-11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் எனல் பொருந்தும்–வடமொழி மிகுதியாகச் சேர்க்கப்பட்ட தமிழ் திரிந்த மலையாள மொழி தோன்றிற்று எனலாம் இன்று உலகம் போற்றும் சிலப்பதிகாரம் தோன்றிய நாடு சேர நாடேயாகும். அங்குச் சேரர் பரம்பரையில் இருவகுப்பு இருந்தன என அறிகிறோம். ஒன்று, சேரலாதன் பரம்பரை; மற்றொன்று, இரும்பொறை மரபு. திருவாங்கூர் - கொச்சியாகிய தென்பகுதியைச் சேரலாதன் பரம்பரையும், இப்போதைய மலபார் தென்கன்னடப் பகுதியை இரும்பொறை மரபினரும் ஆண்டனர் எனலாம். இரு வேறு தனிப்பட்ட மரபினராக அவர்கள் வாழ்ந்த போதிலும் அவர் தம்முள் மாறுபட்டதாக வரலாறு இல்லை. தாயத்தாரெனத் தனித்தனி வாழ்ந்த அவர்களது அரசியல் முறை பெரும்பாலும் அமைதியாகவே அமைந்தது எனலாம். சேரர் பற்றிய பாடல்களும், சேர மன்னரே பாடிய பாடல் சிலவும் சங்க இலக்கியங்களிலே காண்கிறோம். இவர்கள் மரபினுக்கு என்றே ஒரு தனித்த இலக்கியமும் உருவாயிருந்தது சிறக்க வாழ்ந்த சோழ பாண்டிய பரம்பரைகளுக்கு இல்லாத ஒரு தனிப் பெருமை அது. ‘பதிற்றுப் பத்து’ என்ற நூறு பாடல்களின் தொகுப்பே அந்நூல். பதிற்றுப்பத்தின் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இன்று கிடைக்கவில்லை. கிடைத்த மற்றவற்றைக் கொண்டு சேரர் தம் வாழ்வை ஒருகாறு ஆராய இயலும். இப்பத்துக்களின் பதிகங்களைக் கொண்டே அவர்தம் பரம்பரை மருமக்கள் வழி வந்தது என ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/130&oldid=1358354" இலிருந்து மீள்விக்கப்பட்டது