பக்கம்:தமிழக வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழக வரலாறு



இருந்திருக்கலாம். இவ்வாறு கொடையால் புகழ் பெற்ற குறுநில மன்னரே யன்றி, வேறு சில சிற்றரசரும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மூவேந்தருக்குக் கீழ்ப்பட்ட வராகவும், சேனைத் தலைவர் முதலிய பதவிகளை வகித்தவர்களாவும், பிற அரசியற் காரியங்களைக் கவனித்தவராகவும் வாழ்ந்து வந்தார்கள் எனலாம். புறநானூறு போன்ற இலக்கியங்களின் வழி எத்தனையோ மன்னர்கள்—-சிற்றரசர்கள்--குறுநில மன்னர்கள் பெயரளவில் நம்முன் வந்து நிற்கின்றார்கள். அவர்களைப் பற்றிய முழு வரலாறுகளையும் விளக்கங்களையும் அறியத்தக்க வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புக்கள் இலக்கியச் செய்திகளே. அவற்றைக் கொண்டு கனகசபைப் பிள்ளை, P.T. சீனிவாச ஐயங்கார் போன்ற சில அறிஞர்கள் கடைச்சங்ககால வேந்தர்களை ஒருவாறு காட்டியிருக்கிறார்கள்.

இவர்களையன்றித் தொண்டை நாடு, சோழ நாட்டு எல்லையில் சேர்ந்திருந்த போதிலும் அந்தப் பகுதியைத் தனியாக மன்னர்கள் ஆண்டார்கள் என அறிகின்றோம். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இளந்திரையன் ஆண்டான் என்பது பத்துப்பாட்டின் பெரும்பாணாற்றுப் படை என்னும் நூல் வழியே தெரிகின்றது. அவன் சோழன் மைந்தனேயானாலும் எப்படியோ தனியாகத் தலைநகரமைததுச் சிறக்க ஆண்டான் என அறிகின்றோம். அவனைப் பற்றியும், அவன் தலைநகர் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும், மக்கள் வாழ்க்கை பற்றியும் அநதப் பெரும் பாடல் நமக்கு நன்கு விளக்குகின்றது.

மேற்கே சேர நாட்டுக்கும் சோழ பாண்டிய நாடுகளுக்கும் இடையே கொங்கு நாடு அமைந்திருத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/134&oldid=1375664" இலிருந்து மீள்விக்கப்பட்டது