பக்கம்:தமிழக வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

133


அது இக்காலத்துக் கோவை, சேலம் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது. அதைச் சேரர் தமது ‘புற நாடு’ என வழங்குகின்றனர். அவர்தம் அகநாடு மலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாயமைவதால், இது புற நாடாகின்றது. எனினும், சேரர் ஆணைவழி என்றும் இப்பகுதி இருந்தது என்று கொள்ள முடியாது. இப்பகுதி மூவேந்தர் கையிலும் மாறி மாறி நின்றது என்று கொள்ளுதல் பொருத்தமாகும்.

அக்காலத்தில் தமிழ் நாட்டு எல்லை வடவேங்கடம் வரையில் அமைந்திருந்தது. வேங்கடத்து உம்பர் மொழி பெயர் தேயத்தில் பல மன்னர் ஆண்டனர். மைசூர் நாட்டிலும் (எருமை நாடு), ஆந்திரத்திலும், இன்னும் அதற்கு அப்பாலும் வாழ்ந்த வேந்தர்கள் தமிழ் நாட்டொடு பல வகையில் தொடர்பு கொண்டிருந்தார்கள். எனவே அந்தச் சங்ககாலம், தமிழ் நாட்டு வரலாற்றில் சிறந்த பொற்காலமாய் இருந்ததென்றும் இமயத்தொடு ஈழத்தைப் பிணித்து ஒன்றி வாழ்ந்த காலமாயிற்றென்றும் நன்கு அறிகின்றோம். இனி அரசரை விடுத்து, அக்காலத்தில் தமிழ்நாட்டுள் வாழ்ந்த மக்கள் தம் வாழ்க்கை முறையையும் பிறவற்றையும் கண்டு மேலே செல்வோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/135&oldid=1358369" இலிருந்து மீள்விக்கப்பட்டது