பக்கம்:தமிழக வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ᏙIII. சங்ககாலத்துச் சமூக வாழ்வு


அறிய உதவுவன:

தமிழ்நாட்டு மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய விரும்புபவருக்கு அதை விளக்கமாக காட்டும் கால எல்லை கடைச் சங்க நாட்களேயாம். அதற்குமுன் பன்னெடுங்காலமாகவே மக்கள் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும், முற்றும் அறிந்து கொள்ளும் வகையில் அவர் தம் வாழ்க்கையை நன்கு விளக்கச் சான்றுகள் இல்லை. கடைச்சங்க காலத்திலும் வரலாறு நிறைந்த குறிப்புகள் இன்றேனும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் அவர்தம் வாழ்வைக் கண்ணாடிகளெனக் காட்டி நிற்கின்றன. எனவே, தமிழர் தம் தெளிந்த வாழ்வை அறிய அவை பெரிதும் உதவுகின்றன எனலாம்.

நானிலம்:

தமிழகம் நால்வகைப்பட்ட நிலப்பகுப்புக்களாகத் தொல்காப்பியர் காலத்திலேயே பிரிக்கப்பட்டதென அறிந்தோம். உலகுக்கே நானிலம் என்ற பெயர் அதனால் ஏற்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகை நிலத்திலும் அவ்வந் நில அமைப்புக்கு ஏற்ப மக்கள் வாழ்க்கை நடத்திவந்தார்கள். தனிநிலமல்லாத இருநிலம் திரிந்த பகுதியாகிய பாலையிலுங்கூட மக்கள் வாழ்வு நடைபெற்று வந்தது எனலாம். எனவே, ஐவகைப் பட்ட மக்கள் வாழ்க்கை முறை தமிழகத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் இயற்கையின் நியதிக்கு ஏற்ப, விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்தன. மக்களும் குடிசைகளோ மாளிகைகளோ அமைத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/136&oldid=1358370" இலிருந்து மீள்விக்கப்பட்டது