பக்கம்:தமிழக வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழக வரலாறு


ஆடை வகைகளின் உயர்வும் தோன்றுகின்றது. அதைப் போன்றே, கலங்களும்-உண்கலங்களுமாகிய பாத்திரங்களும்-அணியும் கலன்களாகிய ஆபரணங்களும்-பலப்பல வகையில் அன்று நன்கு செய்யப்பட்டன என்பது கண்கூடு. இரும்புக் கொல்லர், பொற்கொல்லர், கருங்கைக் கொல்லர் போன்றார் தனித்தனியே தத்தமது பணியாற்றிச் சிறந்தார்கள் எனலாம். அணிகள் பலப்பல இருந்தன என்பதைப் புறநானூறு போன்ற இலக்கியங்கள் காட்டுகின்றன. ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்ற வகையில் பல்வேறு அணிகலன்கள் இருந்தன என்றும், அவற்றை அணிய வகையறியா வறிய குடும்பங்களும் நாட்டில் நிரம்ப இருந்தன என்றும் ஒரு புலவர் நன்கு காட்டுகின்றார்.

இத்தகைய அணிகலன்களுடன் அக்காலத்திலேயும் நாணயங்கள் பழக்கத்தில் இருந்தன என்பர் ஆராய்ச்சியாளர். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமப் பேரரசிலிருந்து பலர் இங்கு வாணிபத்தின் பொருட்டு வந்ததாகவும், வந்தவர் தம்முடன் சில நாணயங்களைக் கொண்டு சென்றதாகவும், அங்கு அவை கண்டெடுக்கப்பட்டனவாகவும் கூறுவர் ஆய்வாளர். தவிர, அதே இரண்டாம் நூற்றாண்டின் உரோமப் பேரரசின் நாணயங்கள் சில இங்குத் தமிழ் மண்ணில் காணப் பெறுகின்றன எனவும் கூறுவர்.

வாணிபமும் உழவும்:

இவ்வாறு பல்வேறு வகையில் சிறந்த தமிழ் மக்கள் வாணிபத்திலும் சிறந்தவர்களாகவே விளங்கினார்கள். தாங்கள் திரைகட லோடி வாணிபத்தை வளர்த்ததோடு, தங்கள் நாட்டிலும் பிற நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/146&oldid=1358419" இலிருந்து மீள்விக்கப்பட்டது