பக்கம்:தமிழக வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஐயங்கார் போன்றோர் தம் நூல்களும் பிறவும் இன்று தமிழ் நாட்டு வரலாற்றை நம்முன் கொண்டு வந்து காட்டுகின்றன[1]. எனினும் ஒன்றும் தொடர்ச்சியாக வரலாற்றுக்காலத்துக்கு முன் தொடங்கி இன்று வரை தமிழக வரலாற்றை வரையறுத்து வெளிக்காட்டவில்லை எனலாம். இரண்டாயிர மாண்டுகளுக்கு மேற்பட்ட தமிழக வரலாற்று நிலையை வரிசையாக வகைப்படுத்தி வெளிக்கொணர்வதும் அவ்வளவு எளிதன்று. எனினும், அத்துறையில் நான் மேற்கொண்ட முயற்சியே இச்சிறுநூலாகும்.

இந் நூலில்

இந்நூலில் வரலாறு மிகு பழங்காலம் தொட்டு, இன்றுவரை முறைப்படுத்தி எழுதப் பெற்றுள்ளது. இவ்வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் நானே முயன்று புத்தம் புதியனவாகக் கண்டு பிடித்தவையல்ல. ஒவ்வொரு காலத்தைப் பற்றியும் பல்வேறு அறிஞர்கள் எழுதிய வரலாற்று நூல்களின் துணை கொண்டே இந்நூலை எழுதியுள்ளேன் அவற்றை அவ்வப் பக்கங்களில் குறித்துள்ளேன் சிறப்பாக நீலகண்ட சாஸ்திரியாருடைய சோழர் வரலாறும், ஹீராஸ் பாதிரியர், கோபாலன் ஆகியோர் பல்லவர் வரலாறும், P.T. சீனிவாச ஐயங்கார், கனகசபைப் பிள்ளை ஆகியோரின் தமிழக வரலாறும், சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் பாண்டியர் வரலாறுகளும், பிறவும் எனக்குப் பெருந்துணை செய்தன எனலாம். அவர்களெல்லாம் ஒவ்வொரு காலத்தைப்பற்றி விரிவாக எழுதிய கருத்துக்களைச் சுருக்கி, ஆய்ந்து கண்ட பல புதிய குறிப்புக்களோடு சேர்த்துக் கோவை செய்யப்பட்டதே இந்நூல்.


  1. இவற்றுள் பல இக்காலத்தில் (1995) கிடைக்கவில்லை. அரசு வெளியிட ஆவன செய்தல் நலம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/16&oldid=1356967" இலிருந்து மீள்விக்கப்பட்டது