பக்கம்:தமிழக வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழக வரலாறு


கள்அனைத்தும் காப்பிய காலத்தும் நலங்குன்றாமல் சிறந்திருந்தன என்பது தெளிவு. எனினும், மணிமேகலையின் பிற்காலத்தில் புகார் என்னும் தமிழர் தம் பழம் பெருமையை விளக்கும் காவிரிப்பூப்பட்டினம் அழிவுற்றதை அறியும்போது நம்மை அறியாமலேயே வருத்தம் நம்மை வந்து மூடுகின்றது.

வாழ்க்கை முறை-அரசியல்:

இனி, அக்காலத்திய தமிழ் நாட்டின் மக்கள் வாழ்க்கை முறையினைக் காண்போம். அரசியலில் அதிகமாக மாற்றங்கள் காணப்பெறவில்லை அதே அரச பரம்பரைகளும் அவர்களுக்கு அமைந்த உறுப்புக்களும், அறங்கூறு அவையமும், பிறவும் மாறா வகையில் இருந்தன என்றாலும், அரசியரும் அவர் தம் அவைச் செயலில் பங்கு கொண்டனர் என நன்கு அறிகின்றோம். பாண்டிமாதேவி பக்கத்தில் அரசு கட்டிலில் இருந்ததும், வானவன் மாதேவி அருகிருந்து அறமுறைத்ததும் நோக்கற்பாலன். இந்தக் காப்பியங்கள் இரண்டும் பல நிகழ்ச்சிகளோடு புனையவும் பெற்ற கதைகள் ஆனமையால் ஒரு சில உயர்வு நவிற்சியாகச் சேர்க்கப் பெற்றிருக்கலாம். எனினும், சில வரலாற்றுக்குரிய குறிப்புக்களும் இல்லாமல் போகவில்லை. இளங்கோவடிகள், வஞ்சிக்காண்டத்தின் வழி, தமிழர் தம் போர் முறை எவ்வெவ்வாறு அமைந்திருந்ததென்பதையும் படை எடுப்பு இலக்கண அமைதிக்கு ஏற்ப வரையறை செய்யப்பட்ட ஒன்று என்பதையும் நன்கு விளக்குகின்றார். போர்க்குச் செல்லும் மன்னவன்,யார் யாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையும்,படையின் அமைப்பும் செயலும் எல்வெவ்வாறு இயங்க வேண்டுமென்பதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/160&oldid=1358105" இலிருந்து மீள்விக்கப்பட்டது