பக்கம்:தமிழக வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

165


யில் காண்கின்றோம். நாகரிக மிக்க நகரங்களில் பிற நாட்டு மக்கள் உடன் வந்து கலந்து வாழ்ந்த நிலை ஒரு புறமிருக்க, உள்நாட்டு மாறுபாடுகளைக் காட்டும் பலப் புதுப்புது வேற்றுமைகளும் தோன்றுகின்றன எனலாம். கோயில்கள் புகார் நகரில் பலவாகப் பெருகியுள்ளன. பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் திருமால், முருகன் போன்ற தெய்வங்கள் குறிக்கப் பெறினும், இக் காப்பிய காலத்தில் காணும் அத்துணைக் கோயில்கள் குறிக்கப்பெறவில்லை.[1]

வழிபாட்டுத் தெய்வங்களைக் காட்டும் கோயில்களைத் தவிர்த்து, பூதங்கள் தங்கும் பூதசதுக்கங்களும் நகரங்களில் இருந்தன போலும்! இப்பூதங்களும் இவற்றின் சதுக்கங்களும் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் காணப் பெறாதன, மேலே கண்டபடி பிறநாட்டார் தம் புதுப் புதுக் கொள்கைகளின் நுழைவால் இவையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் நாட்டில் புகுந்தன போலும்! இப்பூதங்களைப் பற்றியும், இவை வாழ் இடங்களைப்பற்றியும், இவற்றின் செயல்களைப் பற்றியும் காப்பியங்கள் பலவாறு புகழ்கின்றன. இவைகளைத் தவிர்த்துக் காஞ்சியில் இருந்த பெளத்த சமணக் கோயில்களின் பெருக்கை எண்ணின் தமிழ் நாட்டு வடகோடியில் இருந்த இப்பெரு நகரில் வடநாட்டு வைதிக சமயத்தைத் தொடர்ந்தே, உடனாகப் பெளத்தமும் அதை ஒட்டிச் சமணமும் புகுந்து நிலைபெற்று விட்டன என அறிகிறோம் புகார், மதுரை, வஞ்சியில் இல்லாத அளவில் காஞ்சியில் பெளத்த விகாரங்கள் மிக்கிருந்ததை மணிமேகலை நன்கு காட்டுகிறது.

இக்காலத்தில் ‘விதி’ பற்றிய கொள்கை நன்கு வலியுறுத்தப்பட்டு விட்டது. சங்க காலத்திலேயும் அக் கொள்கை இருந்தது என்றாலும், ஊழையும் உப்பக்கம்


  1. 1. சிலம்பு: 5, 169.72
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/167&oldid=1358117" இலிருந்து மீள்விக்கப்பட்டது