பக்கம்:தமிழக வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

வரலாற்றுத் துறையிலும் இந்நூல் எனது முதல் முயற்சி. இவ்வரலாற்றைப் பெரும்பாலும் கட்டுரை வகையில் தொகுத்துள்ளேன் அகில இந்திய வரலாற்றுப் பெருஞ்சபையில் உறுப்பினனாய் இருந்து ஈர் ஆண்டு விழாக்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்திருந்த போதிலும், வரலாற்று நூலை முறைப்படி நான் இதுவரை வெளியிடவில்லை இதில் குறைபாடும் இருக்கலாம். காணும் அறிஞர்கள் அவற்றைக் குறித்து எழுதுவார்களாயின், அடுத்து வரும் பதிப்புக்களில் அக்குறைபாடுகளை நீக்க வழி உண்டாகும். இதன் முதல் பதிப்பில் அறியாது கலந்திருந்த சில குறைபாடுகளை இப்பதிப்பில் நீக்க முயன்றுள்ளேன். எனினும் இன்னும் குறைகளிருப்பின் அறிஞர் காட்டித் திருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்நூயில் பிற்காலச்சோழர் பகுதி சற்று விரிவாகவே எழுதப் பெற்றுள்ளது. அதே நிலையில் பல்லவர் காலம், பிற காலங்களைப் பற்றி விரிவாக எழுதவும் கூடும். எழுதின், மிக விரிவாகும் என அஞ்சியும், பயிலும் மாணவருக்கும் மற்றவருக்கும் இந்த அளவில் இவை பயன்படும் என்று கருதியும், தேவையான அளவில் மற்றவற்றை நிறுத்திக் கொண்டேன். அடுத்து இரண்டு அல்லது மூன்று தொகுதிகளாக வெளியிட வாய்ப்பு நேருமேல் அத்தொகுதிகளில் தமிழ்நாட்டு வரலாற்றை விளக்கமுற எழுதலாம் என நினைக்கிறேன். தமிழ்நாட்டு அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் உதவுவார்கள் எனும் துணிவுடையேன். இந்நூல் தமிழ் மக்களுக்கு-சிறப்பாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்ற துணிவுடையேன். வரலாற்றறிஞர் இத்துறைவழி சிறக்க வழி காட்ட வேண்டுமென வேண்டி அமைகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/17&oldid=1356969" இலிருந்து மீள்விக்கப்பட்டது