பக்கம்:தமிழக வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தமிழக வரலாறு



பொருந்தும். அங்குள்ள ‘திருக்கணாமதிலகமே’ இளங்கோ அடிகள் துறவு பூண்டிருந்த குணவாயிற் கோட்டம் என்பர். மேலும், அண்மையில் திருவாங்கூர் தனி அரசாய் இருந்த வரை நாட்டுப் பாடலாக ‘வஞ்சி பத்யம்’ பாடப்பட்டதை யாவரும் அறிவர். எனவே, சேரர் வஞ்சி இன்றைய சிதைந்த அஞ்சைக்களமேயாகும். இன்று அது தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பால் இருக்கின்றதாயினும். அதுவே செங்குட்டுவன் அரசிருக்கையாயிருந்ததோடு, சிறந்த காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைத் தந்த இடம் என்னும்போது தமிழர் ஒவ்வொருவருக்கும் அந்த இடத்தைக் காண வேண்டும் என்றுதான் தோன்றும். அத்தகைய சேரர்தம் தலைநகராகிய வஞ்சி இந்த இருண்ட காலத்திலேதான் நிலை குலைந்தது. அதற்குப் பிறகு சேரநாட்டு எல்லை தனியாகவே பிரிந்துவிட்டது எனலாம். இந்த இருண்ட காலத்துத்குப் பிறகும் சேர மன்னரும் மக்களும் தமிழ் நாட்டுடன் ஒரு சில நூற்றாண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள் என்றாலும் சங்ககாலத்தில் இருந்ததுபோன்று அத்துணைப் பிணைப்பு இல்லை எனலாம் சேரர்தம் அகநாடாகிய இன்றைய மலையாள நாட்டில் 12-ஆம் நூற்றாண்டுவரை தமிழ் மொழியே பேசப்பட்டு வந்ததோடு சிற்சில தமிழ்ப் புலவரும் தோன்றி வந்திருந்தனர் என்பது உண்மையே யாயினும், இந்த இருண்ட காலத்தில் உண்டான அந்தப் பிளவு பின்னர்த் தூர்க்க முடியாததாகி, அச் சேரநாடு தனி நாடாகவும் தனி மொழி வழங்கும் பகுதியாகவும் மாறிவிட்டதென்பதை யாரே அறியாதார்: சோழ பாண்டியப் பகுதிகளில் பின்னர்க் கடுங்கோன் பாண்டியனும் அவன் பரம்பரையும், மகேந்திரனும் அவன் பரம்பரையும், பின்னர் விசயாலயனும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/182&oldid=1375676" இலிருந்து மீள்விக்கப்பட்டது