பக்கம்:தமிழக வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

185


ராகவேராகவே இருக்க வேண்டும். இக் காலமே மணிவாசகரால் போற்றப்பெற்ற கண்ணப்பரும் திருமந்திரம் தந்த திருமூலரும், காரைக்கால் அம்மையார் போன்ற சமயத் தலைவர்களும் வாழ்ந்த காலமாகும்.

நீறு பூத்த நெருப்பு:

இவ்வாறு காணும் இரண்டொரு சோழ மன்னரைத் தவிர்த்து இந்த இருண்ட காலத்தில் வாழ்ந்த வேறு தமிழ் மன்னரைப் பற்றிய வரலாறு நமக்குக் கிடைக்க வில்லை. மேலும், பாண்டிய சேர மரபுகள் அடியோடு அழிந்துவிட்டன என்றும் யாரும் கூற முடியாது. பின் தலை நிமிர்ந்த கடுங்கோன் பாண்டியனது பரம்பரையினர் பாண்டி நாட்டின் சிற்றரசர்களாய், மாற்றாருக்கு அடங்கியும், சிற்சில சமயங்களில் மாறுபட்டும் வாழ்ந்து வந்திருக்கக் கூடும்.அதே போன்று சேர பரம்பரையினரும் அவருள் ஒரு பகுதியின்ராகிய இரும்பொறை மரபினரும் சிற்றரசர்களாகி அடங்கி ஆண்டவராதல் வேண்டும். எனவே, தமிழ் நாட்டு மூவேந்தரும் இந்த இருண்ட காலத்தில் மாசு படிந்த ஒவியம் போன்றும் குடத்துள் விளக்குப் போன்றும், நீறு பூத்த நெருப்பே போன்றும் தம் நிலை மங்கி ஒடுங்கி, மாற்றாருக்கு இடங்கொடுத்து வாழ்ந்து வந்தவராதல் வேண்டும். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தெற்கே பாண்டியரும் வடக்கே பல்லவரும் தலை தூக்க, கடுங்கோனும், மகேந்திரனும் ஒளி இழந்த தமிழ் நாட்டை ஒளிபெறச் செய்தனர். அவருள்ளும் பல்லவரே பல வகையில் சிறந்தனர். எனவே, அவர் வழி அடுத்து வரும் காலத்துத் தமிழகத்தைக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/187&oldid=1358167" இலிருந்து மீள்விக்கப்பட்டது