பக்கம்:தமிழக வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

191


பல சிறந்த செயல்களைச் செய்து அழியாப் புகழ் பெற்றான். அவன் காலத்திலேயே இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிச் சில முறை படை எடுத்து வந்தான். புலிகேசியைக் காஞ்சிக்கருகில் உள்ள புள்ளலூர் வரையில் வரவிட்டுக் காஞ்சியில் இருந்து பின் வளைத்து வெற்றி பெற்றான் மகேந்திரன். புலிகேசியை யன்றிக் கங்க வேந்தரும் அவனுடன் போரிட்டனர். அவன் காலம் போரிடைக் கழிந்தபோதிலும், அவன் கலை வளர்ப்பதிலும் கருத்துடையவனாய் இருந்தான். அவன் முதலில் சமணனாய் இருந்து, பின் அப்பர் என்னும் திருநாவுக்கரசரால் சைவனாக்கப் பெற்றவன். அவன் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ எனும் நூலை எழுதி வடமொழியை வளர்த்தவன் எனினும், திருநாவுக்கரசர் சைவ சமயத்தைப் பரப்பத் தொடங்கிய பின் அவனும் சைவனாகிச் சைவ சமயத்தையும் தமிழையும் ஒருங்கே வளர்க்க முற்பட்டான். முதன் முதல் தேவாரப்பதிகம் தொடங்கிய காலம் அம் மகேந்திரன் காலமே.

மகேந்திரன் சிறந்த கலை வல்லவன்; இசை நலம் பெற்றவன். அவன் குடைந்த குகைக் கோயில்கள் பல்லவபுரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர் மண்டபப்பட்டு, சீயமங்கலம், திருச்சி, நாமக்கல் முதலிய இடங்களில் காணப்பெறுகின்றன. மாமல்லபுரத்தில் உள்ளவற்றுள் இரண்டொரு கோயில்களும் அவன் காலத்தவை என்பர் ஆய்வாளர்.[1] இத்தகைய குகைக்கோயில்கள்


  1. Studies in Pallava History, by Fr. Heras—p. 77
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/193&oldid=1358446" இலிருந்து மீள்விக்கப்பட்டது