பக்கம்:தமிழக வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தமிழக வரலாறு


காலமே ஆண்டான். அவனுக்குப் பின் மக்கள் இல்லை. எனவே, இத்துடன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரை முடிகின்றது. எனினும், அப்பல்லவ மரபினைச் சேர்ந்த சிறந்த இரண்டாம் நந்திவர்மன் பட்டத்துக்கு வந்தான். இவனும் மகேந்திரன் நரசிங்கனைப் போன்று சிறந்த வகையில் அரசாண்டான். இவன் ‘பல்லவ மல்லன்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுச் சிறந்த வீரனாகவும் விளங்கினான். இவன் பட்டத்துக்கு வந்ததைப் பற்றிய மரபுக் கதைகளும் சிற்பங்களும் உள்ளன. இவன் பன்னிரண்டு வயதிலேயே பட்டத்துக்கு வந்தான் என்பர். இவன் அறுபது ஆண்டு (கி.பி. 710-770) ஆண்டவன்.

நந்திவர்மப் பல்லவ மல்லன்:

இந்த நந்திவர்மப் பல்லவமல்லன் காலத்திலும் போர்கள் ஒழிந்தபாடில்லை. இவன் காலத்தில் பாண்டி நாட்டில் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-766) ஆண்டான். அவனுக்கும் பல்லவ மல்லனுக்கும் போர்கள் நடைப்பெற்றன. ஒரு சில இடங்களில் பல்லவரும் வெற்றி பெற்றனர். நந்திவர்மன் பரி வேள்வியும் செய்தான் போலும்!

தொடர்ந்து வந்த பல்லவ சாளுக்கியப் போரும் இவன் காலத்திலும் நடைபெற்றது. இவன் காலத்தில் வாழ்ந்த மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் (735-746). இவர்களுடைய போர்கள் பற்றியும் இருவேறு கருத்துக்கள் உலவுகின்றன. சிலவற்றில் பல்லவர் வென்றிருப்பர். சிலவற்றில் சாளுக்கியர் வெற்றி பெற்றிருக்கக் கூடும். எப்படியாயினும், கலை வளர்த்த பல்லவர் பல்வேறு போர்களுக்கும் இன்னல்களுக்கும் இடையில்தான் தம் பணிபுரிந்தனர் என்பது கண்கூடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/202&oldid=1358534" இலிருந்து மீள்விக்கப்பட்டது