பக்கம்:தமிழக வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

201


இம்மன்னன் சிறந்த வைணவன். காஞ்சியில் மற்றொரு வரலாற்று விளக்கமாக உள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலை அமைத்தவன் இவனே. இவன் பல கோயில்களைக் கட்டினான்; சைவ வைணவக் கோயில்களன்றி, சமணர்தம் படிமங்களும் செய்தான் என்பர். கல்வியிலேயும் இவன் சிறந்தவன். வடமொழி தமிழ் இரண்டையும் வளர்த்தான். பல மறையவர் இவனால் போற்றி வளர்க்கப்பட்டவராவர் பப்பதேவனால் தோற்றுவிக்கப்பட்டு, சிம்மவிஷ்ணு, மகேந்திரன் போன்றோரால் வளர்க்கப்பெற்ற பல்லவப் பேரரசு இவன் காலம் வரையிலேதான் உச்ச நிலையில் இருந்தது எனலாம். இவனுக்குப்பின் தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகிய அரசர்கள் சிறந்துவிளங்கினார்கள் என்றாலும், பல்லவர் ஆட்சியின் நிலப்பரப்பு இவன் காலத்துக்குப்பின் குறுகிற்று என்றே கொள்ளல் வேண்டும்.

தந்தியும் நந்தியும்:

பல்லவ மல்லனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவன் தந்திவர்மன் (774—-825). இவன் இரட்டர்களுடன் பல முறை போரிட்டான். தெற்கே வரகுண பாண்டியன் இவன் காலத்திருந்தான்; அவனுடனும் போரிட்டான். இவன் காலத்திலும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் கோயில்கள் கட்டப்பெற்றன. இவனுக்குப்பின் பட்டத்துக்கு வந்தவன் மூன்றாம் நந்திவர்மன் (825—850). இவன் தெள்ளாறெறிந்த நந்தி என்று சிறப்பிக்கப் பெற்றவன். ‘நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்ற உலகறிந்த நந்திக் கலம்பகத்தால் பாராட்டப் பெற்றவன் இவனே. இவன் மூவேந்தரிடமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/203&oldid=1375685" இலிருந்து மீள்விக்கப்பட்டது