பக்கம்:தமிழக வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XII. பல்லவர் காலத்துத் தமிழகம்

சமுதாயம்:

பல்லவர் காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு சிறந்த பொற்காலமெனக் குறிப்பிட்டோம். அக்காலத்தில் ஆண்ட மன்னர்களைப் பற்றியும் அவர்தம் பண்பு, கலை வளர்த்த சிறப்பு முதலியவற்றையும் கண்டோம். அக் காலத்தில் தமிழ்நாட்டு மக்கட் சமுதாயம் எந்த நிலையில் இருந்தது என்பது பற்றியும் அச்சமுதாயம் பல்லவர்தம் பணிகளால் எவ்வெவ்வாறு பலன் பெற்று ஏற்றமுற்றது என்பது பற்றியும் இங்கே காண்போம் பல்லவர்கள் பல்வேறு போர்களுக்கு இடையில் நாட்டைப் பண்படுத்தியவர்கள் என அறிந்தோம். அந்தப் போர்கள் ஓரளவு நாட்டின் அமைதியைக் குலைத்தன என்றாலும் அப்போர்களின் இடையிலேயும் பல கலையும், தொழிலும், பிறவும் வளர்ந்து சமுதாயத்துக்கு உறுதுணையாயின என்று கொள்ள வேண்டும்.

சங்க காலத்துக்குப்பின் பிற்காலப் பல்லவர் காலத்திலேயே தெளிந்த தமிழ்நாட்டை நம்மால் காண முடிகின்றது. இரண்டு காலங்களுக்கும் பலப்பல வேறுபாடுகளும் தெரிகின்றன. தொழிலால் வேறுபாடு கண்ட சங்க காலத்தினும் பிறப்பால் வேறுபாடு காணும் பல்லவர் காலம் சமுதாயத்தையே மாற்றி அமைத்துவிட்டது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற சைவ அடியவர் தம் பிறப்பைப்பற்றி விளக்கிக் கூறவந்த சேக்கிழார், ஒருவரை அந்தணர் குலத்தவர் என்றும் மற்றவரை வேளாண் குலத்தவர் என்றும் குறிக்கின்றார். அந்தணர் குலத்தவராய்ப் பிறந்த அப்பூதி அடிகளார் வேளாண் குலத்தவராகிய நாவுக்கரசரை வீட்டுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/206&oldid=1358546" இலிருந்து மீள்விக்கப்பட்டது