பக்கம்:தமிழக வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் காலத்துத் தமிழகம்

209


செப்பேடுகளாலும் பிறவற்றாலும் நன்கு தெளிவாகின்றன.

ஊராட்சி:

பல்லவர் காலத்தில் மக்கள் தெளிந்த அறிவுடையவராய் நலம் பெற்றிருந்தனர் எனலாம். சங்க காலத்துக்குப்பின் பல்வேறு வேற்று மன்னர்தம் ஆட்சிக்குட்பட்டு அல்லலும் அவதியும் உற்ற தமிழ் மக்கள், பிற்காலப் பல்லவர் ஆட்சியில் நலம் பல பெற்று நன்கு வாழ்நதனர் எனலாம். நாட்டை மாற்றாரிடமிருந்து காக்க நல்ல படை வலிமை பெற்று விளங்கியவர் பல்லவர் என்பதை மேலே அவர்தம் வரலாற்றில் வந்த போர் முறைகளால் அறிந்தோம். இடையிடையே போர் பல நிகழினும் மக்கள் அப்போர்களால் அல்லல் அடையாதபடி பல்லவர் ஒல்லும் வகையில் பாதுகாத்து வந்தனர். மன்னர் ஆட்சியாயினும் ஊர்ச் சபைகள் மக்கள் தேவைகளை நிறைவு செய்தன. ஊராட்சி மன்றங்களும் அவற்றின் உட்கழகங்களும் தத்தம் ஊர்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயல் புரிந்தன என்பதைக் கோபாலன் அவர்கள் தம் நூலில் நன்கு விளக்குகின்றார்[1] சிற்றூர்கள் இவ்வாறு ஆளப்பெற, அந்த அடிப்படையிலேயே பேரூர்களும் அரசும் நிருவகிக்கப் பெற்றன எனலாம்.

மக்கள் பணி:

நிலம் நன்கு பகுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது எனலாம். மக்கள் பயிரிடத்தக்க வகையில் பல ஏரிகள் வெட்டப்பெற்று நீர்ப்பாசனத்துக்கு வழித்துறைகள் காணப்பெற்றன. பெரும்பிடுகு வாய்க்கால், வைர மேகன் வாய்க்கால், திரையன் ஏரி எனும் தென்னேரி, பரமேச்சுர தாடகம், மாற்பிடுகு ஏரி போன்றவை அவற்றிற்குச்


  1. Pallvas of Kanchi, pp. 154-156
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/211&oldid=1358579" இலிருந்து மீள்விக்கப்பட்டது